/indian-express-tamil/media/media_files/2025/01/29/56LU8C8EzWRcsTbypWSi.jpg)
குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக மலச்சிக்கல் இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். வயதானவர்கள் சில மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அதன் காரணமாகவும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே பணியாற்றுபவர்கள், உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் ஆகியோருக்கு மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கலாம். இவை பைல்ஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
மலச்சிக்கல் தொல்லை இருப்பவர்கள் ஒரு நாளைக்கு கட்டாயம் 2 வேளை மலம் கழிக்க வேண்டும் என மருத்துவர் நித்யா கூறியுள்ளார். இதற்காக உணவு முறையில் நாம் பின்பற்ற வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, உடலில் தேவையான அளவு நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இவற்றை போதுமான அளவு கட்டாயம் சாப்பிட வேண்டும் என மருத்துவர் நித்யா கூறுகிறார்.
அவரைக்காய், பீன்ஸ், சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நார்ச்சத்துடன் சேர்த்து நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
கீரைகளை பொறுத்தவரை வெந்தயக் கீரையை கட்டாயம் சாப்பிட வேண்டும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். ஏனெனில், இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பருப்பு கீரை மற்றும் பொன்னாங்கன்னி கீரையையும் சாப்பிடலாம்.
மேலும், பப்பாளி பழத்தையும் தாராளமாக சாப்பிடலாம் என அவர் தெரிவித்துள்ளார். இது மலச்சிக்கல் பிரச்சனை மட்டுமின்றி, சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவதாக அவர் கூறுகிறார். மேலும், அத்திப்பழம், நெல்லிக்காய், அன்னாசிப் பழம் ஆகியவற்றையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
குறிப்பாக, இரவு 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டு விட்டு கட்டாயம் 10 மணிக்கு உறங்கச் சென்று விட வேண்டும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.