'முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்' என்ற ஒரு பழமொழி நம்மிடையே புழக்கத்தில் இருந்தாலும், மருத்துவ ரீதியாக முருங்கையின் பயன்கள் இதற்கு முற்றிலும் மாறானது என்று மருத்துவர் தில்லை வாணன் கூறுகிறார். பார்க்க எளிதாக தோன்றும் இந்த முருங்கை, குறைந்த கலோரிகளில் அதிகப்படியான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும்.
அதன்படி, முருங்கை ஒரு சாதாரண கீரை அல்ல; அது ஊட்டச்சத்துகளின் களஞ்சியம். இதன் மகத்துவத்தை மருத்துவர் தில்லை வாணன் பட்டியலிடுகிறார்:
கால்சியம் சத்து: பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் முருங்கையில் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், பற்களின் உறுதிக்கும் இன்றியமையாதது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
வைட்டமின் சி: ஆரஞ்சுப் பழத்தை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி சத்து முருங்கையில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி, காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
வைட்டமின் ஏ: கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ, கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக முருங்கையில் நிறைந்துள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது.
இந்த அற்புதமான ஊட்டச்சத்துகள் அனைத்தும் நமது வீட்டின் அருகிலேயே, மிக எளிதாக கிடைக்கும் முருங்கை மரத்தில் உள்ளன என்பது ஆச்சரியமான தகவல் என்கிறார் மருத்துவர் தில்லை வாணன்.
நமது பாரம்பரிய மருத்துவத்திலும், அன்றாட உணவு பழக்கவழக்கங்களிலும் முருங்கைக்கு ஒரு முக்கிய இடத்தைக் கொடுத்து, அதன் நன்மைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.