குழந்தைப்பேறு இல்லாத தம்பதியரில், ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவு அல்லது விந்தணுக்களின் இயக்கம் குறைபாடு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இதை சோதித்து அறியும் போது பல ஆண்கள் உளவியல் ரீதியாக பெரும் வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால், இந்த நிலை குறித்து அஞ்சத் தேவையில்லை என்று சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் வலியுறுத்துகிறார். நவீன அறிவியலும், உலகளவில் விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்த சித்த மருந்துகள் மிகச் சிறப்பாகப் பயன்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன.
Advertisment
மூலிகைகளில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மூலிகை அறிவியலை நமது தமிழ் மருத்துவம் பெரிய அளவில் பயன்படுத்துவதால், சித்த மருந்துகள் நிச்சயமான பலன்களைத் தரும் என்றும் விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் மனரீதியாக வருந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்.
விந்தணு உற்பத்திக்கு உதவும் உணவுகள்:
கீரைகள்: உணவுப் பழக்கத்தில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துகிறது என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கீரைகளில் செலினியம், மெக்னீசியம் போன்ற நுண்ணிய கனிமங்கள் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை விந்தணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
Advertisment
Advertisements
சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக்கீரை, தூதுவளைக்கீரை, தாளி கீரை, பசலைக்கீரை ஆகியவை சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை எல்லாம் "போகம் விளைவிக்கும் கீரைகள்" இந்த கீரைகள் விந்தணுக்களை கூட்டுவதுடன், உடலுறவில் நாட்டத்தையும் ஏற்படுத்தும்.
இந்தக் கீரைகளை பாசிப்பயிறு அல்லது பச்சைப்பயறுடன் சேர்த்து, தேங்காய்ப் பூ சேர்த்து பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து உட்கொள்ளலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். சில மூலிகை வேர்கள் மற்றும் கிழங்குகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்குப் பயன்படுகின்றன.
பாரம்பரிய மருத்துவத்தில், பல தாவரங்களின் கனிகளின் விதைகளுக்கு விந்தணுக்களை உயர்த்தும் தன்மை இருப்பதாக நம்பப்பட்டது. சப்ஜா விதை, சீமை நீர்முள்ளி விதை (நீர்முள்ளிச் செடி ஒரு நுண்ணிய தாவரம்), வெல்வெட் பீன் (பூனைக்காலி) விதைகள், வெட்பாலை அரிசி விதை போன்றவை விந்தணு மேம்பாட்டிற்குப் பயன்படுகின்றன.
அமுக்கரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு போன்ற கிழங்குகள், மதனகாமேஸ்வர பூ போன்ற சில பூக்களும் அணுக்களை கூட்டி, அவற்றின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையும், இயக்கமும் நிச்சயமாக அதிகரிக்கும்.
சரியான முறையில் உணவுப் பழக்கத்தையும், சித்த மருந்துகளையும் கடைப்பிடித்து, கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ள நாட்களில் தம்பதியர் கூடும்போது, நிச்சயமாக அவர்களுக்கு வெகு விரைவில் குழந்தைப்பேறு கிட்டும் என்று டாக்டர் சிவராமன் தெரிவிக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.