/indian-express-tamil/media/media_files/2025/03/23/CjXNYjaakSNq1wblGYxt.jpg)
முருங்கை மரம் என்பது பல நோய்களுக்கான நிவாரணி. அதன் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. குறிப்பாக, முருங்கை இலைகளில் உள்ள சத்துக்கள் ஏராளம். வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டிருப்பதால், இது ஒரு சூப்பர்ஃபுட் ஆகக் கருதப்படுகிறது.
முருங்கை இலையில் உள்ள கால்சியம் பால் மற்றும் ஆரஞ்சை விட பல மடங்கு அதிகம். இது எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் அவசியம். முருங்கை இலையில் உள்ள வைட்டமின் சி, ஆரஞ்சை விட 7 மடங்கு அதிகம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க இது பெரிதும் துணைபுரிகிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ, கண்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. இது கண் பார்வையை கூர்மையாக்குகிறது. மேலும், மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. முருங்கை இலையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
முருங்கை இலைப் பொடி தயாரிக்கும் முறை: முருங்கை இலைப் பொடியை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இளம் முருங்கை இலைகளைப் பறித்து, அவற்றில் உள்ள குச்சிகள் மற்றும் சேதமடைந்த இலைகளை நீக்கி விடவும். இலைகளை தண்ணீரில் நன்றாகக் கழுவி, ஈரப்பதம் இல்லாமல் ஒரு சுத்தமான துணியில் பரப்பி காய வைக்கவும். இலைகளை நேரடியாக சூரிய ஒளியில் காய வைப்பதைத் தவிர்க்கவும்.
நிழலில், காற்றோட்டமான இடத்தில் 2-3 நாட்கள் உலர்த்தவும். இலைகள் நன்கு காய்ந்து, மொறுமொறுப்பாக மாறும் வரை உலர்த்த வேண்டும். காய்ந்த இலைகளை மிக்ஸியில் போட்டு, மிருதுவான பொடியாக அரைக்கவும். அரைத்த பொடியை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இந்த பொடியை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
முருங்கை இலைப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடிப்பது, சட்னி, சாம்பார் போன்றவற்றில் சேர்ப்பது போன்ற பல வழிகளில் பயன்படுத்தலாம். ஆனால், தயிருடன் சேர்த்து சாப்பிடுவது பல கூடுதல் நன்மைகளைத் தருகிறது. ஒரு கிண்ணம் தயிருடன் ஒரு தேக்கரண்டி முருங்கை இலைப் பொடியைச் சேர்த்து கலந்து சாப்பிடும் போது, புரதம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஒரே நேரத்தில் கிடைக்கிறது.
தயிர் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. இது முருங்கை இலைப் பொடியுடன் சேரும்போது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேலும் மேம்படுகிறது. தயிரில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்கள் முருங்கை இலைப் பொடியில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.