ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறான் என்பதை இதயம் தான் உணர்த்துகிறது. இதயம் துடிப்பது நின்றுவிட்டால், இறந்துவிட்டதாக அர்த்தம். இதன் மூலம் நமது உடலில் ஒய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே உறுப்பு இதயம் தான். இந்த இதயத்தை பாதுகாப்பாக வைத்திருந்தால் நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட ஒரு காரணமாக இருக்கிறது.
இந்த நிலையை தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ரத்த குழாயில் ஏற்படும் அடைப்புதான் உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையை எப்படி சரி செய்வது எப்படி வராமல் தடுப்பது என்பது குறித்து, டாக்டர் தீபா இந்து தமிழ் திசை யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
இதயத்தின் ஆரோக்கியத்திற்கு, பூண்டு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்த பூண்டை பாலில் வேக வைத்தோ, அல்லது சமைக்கும்போது உணவில் சேர்த்துக்கொண்டோ சாப்பிட்டால் அதில் பலன் இல்லை. பூண்டின் முழு பலனையும் பெற வேண்டும் என்றால் அதை துண்டு துண்டாக நறுக்கி, காலை உணவில் பச்சையாக சேர்த்து சாப்பிட வேண்டும். உணவு இல்லாமல் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அசிடிட்டியை ஏற்படுத்தும். அதனால் உணவுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
அதேபோல் ஆளி விதை, சோம்பு, உள்ளிட்ட பொருட்களும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த குழாயில் ஏற்படும் அடைப்புகளை தடுக்கும். ஒரு வெற்றிலையில், ஆலி விதை, சோம்பு ஆகியவற்றுடன் உலந்த திராட்சை, பேரிட்சம் பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.
அதேபோல் பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடலாம். குறிப்பாக நிலக்கடலையை ஊறவைத்து எடுத்துக்கொள்ளலாம். நிலக்கடலையை வறுத்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தாது.
நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவிற்கு ஃபைபரை சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு நன்மைகள் அதிகம்.
உடலில் கொழுப்பு எங்கேயும் படியாமல், மலம் வழியாக அதனை வெளியேற்ற உதவி செய்யும். இதற்காக கீரைகள், காய்கறிகள், பழங்கள் என அனைத்தையும் நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
பூண்டு உட்கொள்ள கூடிய முறை: தினசரி நான்கிலிருந்து ஐந்து பூண்டை நறுக்கி காலை உணவோடு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தனியாக சாப்பிடவே கூடாது உணவுகளோடு சேர்த்து சாப்பிட வேண்டும். அதேபோல காலையில் வெறும் வயிற்றில் இதை எடுத்து கொள்ள கூடாது.
இந்த தகவல் இந்து தமிழ் திசையில் இருந்து பெறப்பட்டது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.