/indian-express-tamil/media/media_files/2025/03/18/w61FaV1JEcdkUEpBuTpF.jpg)
நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவது, ரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் (RBCs) இருக்கும் ஒரு புரதம், இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. இதன் குறைபாடு பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அதற்கு என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் நித்யா தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
நமது ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்கள் (RBCs), ரத்த வெள்ளை அணுக்கள் (WBCs), தட்டுகள் (Platelets) போன்ற பல செல்கள் உள்ளன. இவற்றில், RBCs ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. அதேபோல், கார்பன் டை ஆக்சைடு நிறைந்த ரத்தத்தை உடலில் இருந்து சுத்திகரிக்கவும் RBCs மிகவும் அவசியம். உடலின் சீரான இயக்கத்திற்கு ஹீமோகுளோபின் மிகவும் முக்கியம்.
ஹீமோகுளோபின் குறைபாட்டின் அறிகுறிகள்
மூச்சு விடுவதில் சிரமம்: சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும்.
படபடப்பு: இதயம் வேகமாக துடிப்பது போன்ற உணர்வு.
மனநிலை மாற்றங்கள்: உடலில் ஆக்ஸிஜன் குறைவதால் எதிர்மறை எண்ணங்கள், அதிக சிந்தனை, மன அழுத்தம் மற்றும் கோபம் அதிகரிக்கலாம்.
முடி உதிர்தல் மற்றும் நரைமுடி: அதிகப்படியான முடி உதிர்தல் மற்றும் இளம் வயதிலேயே நரை முடி தோன்றுதல்.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை, வெள்ளைப்படுதல், நகங்கள் உடைதல்.
சோர்வு: சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது போன்ற உணர்வு.
ஹீமோகுளோபினை அதிகரிக்க வழிமுறை: நெய், சீரகம், சிவப்புப் பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றை வதக்கி, மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடுவது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ரத்த சோகையைப் போக்கவும் உதவும் என்பது உண்மை.
சிவப்புப் பொன்னாங்கண்ணி கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த உற்பத்திக்கு அத்தியாவசியமானவை. சீரகம் செரிமானத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. நெய் இந்த ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாகப் பெற உதவுகிறது. மிளகு உடலில் சூட்டை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
மேலும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்: இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அத்தியாவசியமானது. கீரைகள், பீட்ரூட், மாதுளை, அத்திப்பழம், பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி: இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி மிகவும் அவசியம். ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உண்ணலாம்.
சுவரொட்டி: அசைவம் சாப்பிடுபவர்கள் சுவரொட்டியை உட்கொள்வது ரத்த சோகைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.