கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சில இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வீட்டை விட்டு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் வேலை காரணமாக வெளியில் செல்வோர் வெயிலின் வெப்பத்தைத் தணிக்க, குளிர்பானங்கள், பழச்சாறுகள், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.
வெயிலை தணிப்பதற்காக நாம் குடிக்கும் பானங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியம். இல்லையென்றால் உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தவகையில் வெப்பத்தைத் தணிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய அருமையான பானம் ஒன்று உள்ளது. ஆரோக்கியமும் அந்த பானத்தின் பெயர் பானகம்.
இந்த பானகம் வெல்லம், எலுமிச்சை சாறு, ஏலக்காய் மற்றும் சுக்குப் பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் வெல்லம் சேர்க்கப்படும் எலுமிச்சை சாறுடன் சேர்த்துக் குடிக்கும்போது உடலை குளிர்ச்சியடையச் செய்யும். மேலும், உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றும். இதிலுள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.
எலுமிச்சை சாறு உடல் பித்தத்தைக் குறைத்து, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். மேலும், புத்துணர்ச்சியும் கொடுக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். செரிமானத்தை சீராக்கும். சரும ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது.
ஏலக்காய் பானகத்திற்கு நல்ல நறுமணத்தையும் புத்துணர்வான சுவையையும் கொடுப்பதோடு, உடல் சூட்டால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகள், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகளைச் சரி செய்ய உதவும். சுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். பச்சை கற்பூரம் சித்த மருத்துவத்தில் எட்டு வித நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும். இது இயற்கையான குளிர்விப்பானாகவும் செயல்படும்.
இப்படி சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பானகம் எப்படி பாரம்பரிய முறையில் தயாரிப்பது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெல்லம் - 100 கிராம்
எலுமிச்சை பழம் - 1
சுக்குப்பொடி - கால் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைச் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு லிட்டர் தண்ணீரையும் ஊற்றி நன்கு கலந்துவிடுங்கள்.
அடுத்ததாக அதில் சுக்குப் பொடியும் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தையும் விரல்களால் நசுக்கி சேருங்கள்.
இறுதியாக இதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விடுங்கள். அவ்வளவு தான் உடலை குளுகுளுவென்று மாற்றும் சுவைமிக்க பாரம்பரிய பானகம் ரெடி. சுவைத்து உடலையும் உள்ளத்தையும் குளிர்ச்சியடையச் செய்யுங்கள்.
பொதுவாக பெரும்பாலானவர்கள் பானகத்தில் புளி சேர்த்து செய்வார்கள். ஆனால் புளி ரத்தத்தை உறிஞ்சும் என்றும், சோகை உள்ளிட்ட சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. எனவே தான அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கும்போது உடல் வெப்பமும் தணிவதோடு, பித்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதையும் தடுக்கும்.