சிறுதானியங்கள் சமீபகாலமாக அரிசிக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றில் குறிப்பாக வரகு அரிசி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாரத்தில் 3 நாட்கள் வரகு அரிசி சோறு சாப்பிடலாம். இத்தகைய வரகு அரிசி சோறு எப்படி சமைப்பது என்பதை இப்போது பார்ப்போம்.
டாக்டர் எஸ்.ஜே ஹாட் டிவி என்ற யூடியூப் சேனலின் படி, வரகு அரிசியை பல்வேறு முறைகளில் உணவாக எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், சாதாரண அரிசி போல் சமைத்தும் சாப்பிடலாம். கஞ்சியாகவோ, வெண்பொங்கலாகவோ செய்வதற்கு பதிலாக, வீட்டில் எப்போதும் சோறு சமைப்பது போல் வரகு அரிசி சமைத்து சாப்பிடலாம்.
முதலில் வரகு அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைக்காவிட்டால், சோறு பதமாக இருக்காது. வரகை 2-3 வரை நன்றாக கழுவிய பின், தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
பின்னர் வரகை எடுத்து குக்கரில் வைத்து, ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். சோறு கஞ்சியாக இல்லாமல் பிரிந்து வர கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் 4 விசில் வந்தப் பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் அருமையான வரகு அரிசி சோறு ரெடி.
சாதாரண அரிசி சோறுக்கு எப்படி சாம்பார், காரக்குழம்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவோமோ, அப்படி வரகு அரிசி சோறுக்கும் உங்களுக்கு பிடித்த குழம்பு ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“