தேவையான பொருட்கள்
பாசிப்பயிறு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
கம்பு
சோளம்
நரிபயிர்
நாட்டுச்சர்க்கரை
கொள்ளுபருப்பு
முந்திரி
திராட்சை
ஏலக்காய்
பாதாம்
நிலக்கடலை
பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கம்பு, சோளம், நரிபயிர்,கொள்ளுபருப்பு ஆகிய தானியங்களை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றாக வறுக்க கூடாது. ஏனெனில் ஒரு சில பயிர் வகைகள் வறுபட தாமதமாகும் ஒரு சில விரைவில் வறுபட்டு விடும் எனவே அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த தானியங்களை ஒரு அரை மணி நேரம் வெயிலில் காயவைத்து புடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புடைக்கும் போது அதில் ஏதேனும் நன்கு வறுபட்டு கருகிய துகள்கள் இருந்தால் அவை நீங்கி விடும். பிறகு இவை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து நன்கு பொடிபொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல நிலக்கடலையையும் மேற்குறிப்பிட்ட பயிர்களின் சேர்க்கைக்கு கால் பங்கு அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலையை நன்றாக வறுத்து தோல் நீக்கி அதனை மிக்ஸியில் கொரகொரவென்று அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
அடுத்ததாக முந்திரி, பாதம், திராட்சை ஆகியவற்றின் கலவையில் ஒரு 100 அல்லது 150 கிராமை நெய்யில் நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும். வறுக்காமலும் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம், பனங்கற்கண்டு இவற்றில் ஏதாவது ஒன்றை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பதம் தேவையில்லை. இறுகிய பதத்தில் இல்லாமல் சற்று நீர் பத்தத்தில் இருப்பது நல்லது.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைக்கப்பட்ட் தானியங்கள், நிலக்கடலை மற்றும் வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். பின்னர் சிறிது சிறிதாக நாட்டுச் சர்க்கரை கரைசலை சேர்த்து பிசைந்து விடவும்.
பின்னர் லட்டு வடிவில் உருண்டை பிடித்து ஈரப்பதம் நீங்கும் அளவிற்கு நிழலிலேயே காயவைத்து ஒரு பாத்திரத்தில் காற்று புகாதவாறு எடுத்து வைத்து கொள்ளவும். தினமும் 2 என உங்களது பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை எலும்புக்கு வலு சேர்க்கும். பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் நேரங்களில் எந்தவித வலியும் இருக்காது. இந்த உருண்டைகளை வைத்துள்ள பாத்திரத்தில் ஒர் 5 கிராம்பு போட்டு வைத்தால் எறும்பு தொல்லையும் இருக்காது. இதனை ஒரு 10 முதல் 15 நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம். அவ்வப்போது சிறிது நேரம் எடுத்து வெயிலில் உலர்த்தினால் பூசம் பிடிக்கும் என்ற பயமும் இருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“