காலை உணவு பிள்ளைகளுக்கு சத்தாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் வாரத்தில் ஒருமுறையாவது கருப்பு சுண்டல் வைத்து சாதம் எப்படி செய்வது என்று ஸ்பைசிசமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த சாதம் பிள்ளைகளுக்கு புரதம் நிறைந்த சாதமாகவும் இதற்கு சத்தான பீட்ரூ, கேரட் போன்ற காய் பொறியல் வைத்தும் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அருமையான சுவையில் இந்த கருப்பு கொண்டைக்கடலை சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
நெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
ஸ்டார் பூ
வெங்காயம்
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய்
தக்காளி
மஞ்சள் தூள்
உப்பு
உருளைக்கிழங்கு
கருப்பு கொண்டைக்கடலை
தயிர்
கொத்தமல்லி
புதினா
பாஸ்மதி அரிசி
கரம் மசாலா
செய்முறை:
முதலில், ஒரு பிரியாணி பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும். பிரியாணி மசாலாப் பொருட்கள் சேர்த்து பொரிந்ததும், மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து, ஒரு சிறிய மசாலாவை தயார் செய்ய வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், 10 முதல் 12 பல் பூண்டு, நான்கு துண்டுகள் இஞ்சி, மற்றும் ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்த மசாலா பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதன் பிறகு, ஒரு பெரிய தக்காளி, சிறிது மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கியதும், பாதியாக வெட்டிய மூன்று உருளைக்கிழங்குகள் மற்றும் வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை சேர்த்துக்கொள்ளவும். கூடவே, இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர், சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, பாத்திரத்தை மூடி வைக்கவும். உருளைக்கிழங்கு சிறிது நேரம் வேகட்டும். அதன் பிறகு, ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். தண்ணீர் வற்றும் வரை காத்திருக்கவும். தண்ணீர் வற்றியதும், பாத்திரத்தின் மீது ஒரு மூடியைப் போட்டு, அதன் மேல் ஒரு கனமான பொருளை வைத்து 10 நிமிடங்கள் தம் போடவும். இப்போது, ஒரு சூப்பரான சன்னா புலாவ் தயார். இதை ஒரு முறை செய்து பாருங்கள், குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.