Homemade Chicken Biryani recipe through Cooker in Tamil: பிரியாணி யாருக்குத் தான் பிடிக்காது. பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. ஆனால் வீட்டில் பிரியாணி செய்யும்போது, சில நேரம் குழைந்து போகலாம். எனவே குழையாமல் குக்கரில் பிரியாணி எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 250 கிராம்
தக்காளி – 2
புதினா – தேவையான அளவு
வெங்காயம் – 3-4
பட்டை – 2
இலவங்கம் – 2
ஏலக்காய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 ½ ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – தேவையான அளவு
மிளகாய்ப் பொடி – ¾ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 250 மிலி
கொத்தமல்லி - தேவையான அளவு
தயிர் – 1 கப்
சிக்கன் – 400 கிராம்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சூடேற்றி, அதில் எண்ணெய் ஊற்றி காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில், பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து பொரிய விட வேண்டும்.
அடுத்ததாக, இதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறும்போது, இஞ்சி பூண்டு விழுதை அதில் சேர்க்க நன்றாக வதக்க வேண்டும். மேலும் இதில் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
அடுத்ததாக சிக்கன் சேர்த்து சற்று வேக வைத்துக் கொள்ளுங்கள். இதில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்தவுடன், தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: வீட்டுல இட்லி மாவு இருக்கா? 5 நிமிடத்தில் முறுக்கு ரெடி!
தயிர் சேர்த்த உடனே, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நீங்கள் அரிசி சேர்க்க கூடிய அளவை விட 1 ½ மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
மசாலா கொதித்து வரவேண்டும், சிக்கன் சற்று வெந்த உடன், ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து, மெதுவாக கலக்கிக் கொள்ளுங்கள்.
சற்றுக் கொதி வந்தவுடன், குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் அருமையான சிக்கன் பிரியாணி ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் டிரை பண்ணிப் பாருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil