/tamil-ie/media/media_files/uploads/2023/07/kelvikal.jpg)
தென்னிந்தியாவின் தினசரி உணவுகளில் ஒன்று இட்லிதான் என்று உறுதியாகச் சொல்லலாம். இட்லி செய்வது என்பது ஒரு பெரிய பிராசஸ். அரிசி, உளுந்து ஊற வைத்து, மாவு அரைத்து, அதைப் புளிக்க வைத்து பிறகு மாவு கரைத்து பிறகு இட்லி சுட வேண்டும். இட்லி புசுபுசுன்னு வருவதற்கு எப்படி மாவு ஊறவைக்க வேண்டும் என்றும் அரைக்க வேண்டும் என்றும் கேக் பேக்ஸ் லைஃப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரேஷன் பச்சரிசி - 2 கப்
இட்லி அரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மாவு ஜவ்வரிசி - 1/2 கப்
அவுல் - 1/2 கப்
உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் பச்சரிசி மற்றும் 1 1/2 கப் இட்லி அரிசி சேர்த்து நன்றாக 2-3 முறை கழுவவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் 1 கப் உளுந்து மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாகக் கழுவவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் மாவு ஜவ்வரிசி மற்றும் 1/2 கப் அவுல் சேர்த்து ஒரு முறை கழுவவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய ஜவ்வரிசி மற்றும் அவுலை மிக்ஸியில் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஊறிய உளுந்தை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து ஜவ்வரிசி கலவையுடன் சேர்க்கவும்.
அரிசியை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும் (முழுவதும் நைசாக அரைக்க வேண்டாம்). அரைத்த அரிசி மாவையும் உளுந்து கலவையுடன் சேர்க்கவும்.
அனைத்து மாவுகளையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவு புளிப்பதற்கு 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
மாவு நன்றாக புளித்த பிறகு, மெதுவாகக் கலக்கவும். மாவு நுரை நுரையாக இருக்க வேண்டும். இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். இட்லி தட்டுகளை உள்ளே வைத்து 10-12 நிமிடங்கள் வேக வைக்கவும். இந்த மாதிரி ஊறவைத்து அரைத்து இட்லி சுட்டால் புசுபுசுன்னு வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.