காலையில் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? நீங்கள் உங்கள் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் காலை உணவை தேர்ந்து எடுப்பதில் கவனம் வேண்டும்.
அப்படி உங்கள் உடலை ஃபிட்டாக வைக்க கருப்பு கவுனி அரிசியை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.அப்படியாக கருப்பு கவுனி அரிசியில் பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி - 200 கிராம்/1 டம்ளர்
தண்ணீர் - 4 டம்ளர்
நெய் - 2 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
உப்பு
பச்சை மிளகாய் - 2
நெய்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 15
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் சுத்தமான நீரை 2 டம்ளர் ஊற்றி, குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 8 மணிநேரம் கழித்து, அரிசியில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை மட்டும் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்பு அதில் ஊற வைத்துள்ள கவுனி அரிசியை சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.பிறகு அதில் அரிசி ஊற வைத்த நீரை ஊற்றி, அத்துடன் 2 டம்ளர் நீரையும் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
அதில் பச்சை மிளகாய், நெய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, கொதிக்க விடவும். பின்னர் குக்கரை முடி, குறைவான தீயில் வைத்து, 7-8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறி விட்டு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி,மிளகு, சீரகம் சேர்த்து பொரிய விட்டு, முந்திரியை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சுவையான கருப்பு கவுனி அரிசி பொங்கல் தயாராகிவிடும்.