/indian-express-tamil/media/media_files/2025/08/22/moringa-thuvayal-2025-08-22-15-01-04.jpg)
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, சோர்வு மற்றும் இரத்த சோகை பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட முருங்கை கீரையை வைத்து துவையல் எப்படி செய்வது என்று வில்லேஜ் டைரி இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். முருங்கைக்கீரை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இது இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். சோர்வு, இரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கைக்கீரை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இந்தச் சத்து நிறைந்த கீரையை அடிக்கடி சாம்பார், பொரியல் என செய்து சாப்பிடுவதுண்டு. ஆனால், சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டுக்கொள்ள சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை துவையலை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை 1 கப்
எண்ணெய் 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 4 முதல் 6
தேங்காய் துருவல் 1/4 கப்
பூண்டு பற்கள் 3 முதல் 4
சின்ன வெங்காயம் 4 முதல் 5
புளி
உப்பு
பெருங்காயத்தூள்
கடுகு
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, உரித்த முருங்கைக்கீரையை சேர்த்து, கீரையின் நிறம் மாறி, சலசலப்பு அடங்கும் வரை நன்கு வதக்கவும். கீரையை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கீரை வதக்கிய அதே கடாயில், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும். இறுதியாக, தேங்காய் துருவல் மற்றும் புளி (எலுமிச்சை சாறு என்றால் கடைசியில் சேர்க்கவும்) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
வறுத்த அனைத்து பொருட்களையும் (வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், கீரை, வெங்காயம், பூண்டு, தேங்காய், புளி) ஆற விடவும். ஆறிய அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் (அரைப்பதற்கு மட்டும், துவையல் கெட்டியாக இருக்க வேண்டும்) சேர்த்து, கொரகொரப்பாக அல்லது உங்களுக்குப் பிடித்த பதத்தில் அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு பயன்படுத்துவதாக இருந்தால், இந்த நேரத்தில் அரைத்த துவையலுடன் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.
ஒரு சிறிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த துவையலில் கொட்டவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்கீரை துவையல் தயார். இதை சூடான சாதம், இட்லி, தோசை அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us