உணவே மருந்து என்னும் கூற்றை அதிகப்படியாக பின்பற்றுபவர்களில் தமிழர்கள் முதன்மையானவர்கள். அந்த அளவிற்கு நாம் சாப்பிடும் உணவில் இருந்தே நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தும் கிடைத்து விடுகிறது. அவ்வகையில், வெந்தயத்தில் உள்ள சத்துகள் ஏராளம் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆரம்ப நிலையில் இரத்த கொழுப்பு கூடியிருப்பவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த மருந்தாக விளங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெந்தயத்தில் தான் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து என இரண்டும் இருப்பதாக அவர் குறிப்பிடுள்ளார்.
இதில் கரையாத நார்ச்சத்து நம் உடலில் ஜீரணத்திற்கு பெரிதும் உதவி செய்வதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதன் மூலம் மலச்சிக்கல் இன்றி, கழிவுகளை சீராக வெளியேற்ற முடியும். குறிப்பாக கரையாத நார்ச்சத்து நீர்த் தன்மையை உறிந்து கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல், கரையும் நார்ச்சத்து இரத்தக் கொழுப்பை குறைக்கும் வேலையை செய்யும் என சிவராமன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 5 முதல் 10 கிராம் வரை வெந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம்.
சைவ உணவுகளிலேயே வெந்தயத்தில் தான் அதிகளவு நார்ச்சத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக கீரையில் இருப்பதைக் காட்டிலும் வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெந்தயத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டுமென சிவராமன் வலியுறுத்தியுள்ளார். எனினும், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினசரி வெந்தயத்தை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
வெந்தயத்தைப் போலவே வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகியவற்றையும் நம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுதல் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும். குறிப்பாக, வெங்காயத்தை வேக வைக்காமல் தயிர் பச்சடியாக தினசரி எடுத்துக் கொண்டால் அதன் சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். அவ்வாறு, நாள்தோறும் 10 சின்ன வெங்காயங்களை சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைப் பூண்டை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது மிகச் சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் சிவராமன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“