/indian-express-tamil/media/media_files/xJscThRwnggOxBobRYTh.jpg)
முருங்கை கீரையில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எலும்பு சம்பந்தமான நோய்களான மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. சில எலும்பு நோய் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் கூட, முருங்கை கீரை மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது முருங்கை கீரையின் மருத்துவ குணங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது. முருங்கை கீரையை நெய் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது, அதன் சத்துக்கள் உடலால் எளிதாகவும் முழுமையாகவும் உறிஞ்சப்படும். இது உடலுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். நெய் முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்று வீரன் வீடு இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கப்
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
நெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் சுத்தம் செய்த முருங்கைக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம், நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடிவிடவும்.
குக்கரை அடுப்பில் வைத்து 4 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து வேக வைத்த கலவையை நன்கு மசித்து கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, மசித்து வைத்த கலவையை அதில் சேர்க்கவும். அதனுடன் மீதமுள்ள 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது சத்தான மற்றும் சுவையான நெய் முருங்கை கீரை சூப் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.