சுவையான மற்றும் சத்தான முருங்கைக் கீரை தொக்கு எப்படி செய்யலாம் என்று சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். அதனை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.
சுவையான மற்றும் சத்தான முருங்கைக் கீரை தொக்கு எப்படி செய்யலாம் என்று சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். அதனை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.
பேரீட்சை பழம் மற்றும் முட்டையில் இருக்கும் சத்துகளை விட அதிகமான ஊட்டச்சத்துகள் முருங்கைக் கீரையில் இருப்பதாக சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். இவ்வளவு சத்துகள் நிறைந்த முருங்கை கீரையில் இருந்து எவ்வாறு தொக்கு சமைக்கலாம் என்று பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை, துவரம் பருப்பு, தண்ணீர், கடலை எண்ணெய், காய்ந்த மிளகாய்கள், சீரகம், வெந்தயம், பூண்டு, வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், புளி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் முருங்கைக் கீரை மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து குக்கரில் 7 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் 10 காய்ந்த மிளகாய்கள், ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி பூண்டு ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டின் நிறம் மாறியதும் இரண்டு வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி இவற்றுடன் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், ஒரு தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி இத்துடன் சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக, தேவையான அளவு உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கலக்க வேண்டும். இதையடுத்து, வேகவைத்த முருங்கைக் கீரையை இதில் சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விடலாம்.
முருங்கைக் கீரையின் சூடு முற்றிலும் ஆறியதும் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி, 25 கிராம் புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் 6 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, 4 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒன்றரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒன்றரை டேபிள் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதன் பின்னர், அரைத்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை இதில் சேர்க்கலாம். இதனை 5 நிமிடங்களுக்கு நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்யை இதில் ஊற்றி மூடி விட வேண்டும். இவ்வாறு செய்தால் முருங்கைக் கீரை தொக்கு தயாராகி விடும்.
நன்றி - Venkatesh Bhat's Idhayam Thotta Samayal Youtube Channel