நம்முடைய உணவில் 3 விஷயங்களை தவிர்த்தால் 50 வயதிற்கு மேலும் உற்சாகமாக இருக்கலாம் என சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரும் நாம் சாப்பிடும் உணவு நமக்கானதா? அதன் நன்மை என்ன? பாதிப்புகள் என்ன? என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, எண்ணெய், உப்பு மூன்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இதனை 20 வயது முதலே கடைபிடித்து வந்தால், 50, 60 வயதுகளில் உற்சாகமாக இருப்போம்.
எனவே முதலில் இனிப்பை மிகப்பெரிய அளவில் கொண்டாடக் கூடாது. இனிப்பை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் நாட்டுசர்க்கரை, தேன், வெல்லமாக இருப்பது முக்கியம். நமக்கு இனிப்பு தேவை என்றால் பழங்களாக எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் ஒரு பழம் சாப்பிடுவது சிறந்தது. கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிக்கக் கூடாது.
உலகிலேயே உப்பு அதிகமாக சாப்பிடுபவர்கள் நாம் தான். உலக மக்களின் எடுத்துக் கொள்ளும் உப்பு அளவு 4 கிராமாக இருக்கும் நிலையில், நாம் 8 கிராம் வரை எடுத்துக் கொள்கிறோம். உலகிலேயே சிறுநீரகம் சிறிய அளவில் இருக்கும் நாம் தான் அதிக உப்பு எடுத்துக் கொள்கிறோம். இதனால் தான் சர்க்கரை வியாதியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகள் நம்மில் அதிகமாக இருக்கிறது.
அடுத்து எண்ணெயில் வதக்கிய அல்லது பொரித்த உணவுகளை அதிக அளவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. முன்னர் காய்ச்சல் வந்தால் கஷாயமோ, மாத்திரையோ சாப்பிட்டால் சரியாகி விடும். இன்றைக்கு காய்ச்சல் வந்து 5 நாட்கள் தாண்டினால் இரத்து புற்றுநோயாக இருக்குமோ என்று சோதித்துப் பார்க்க வேண்டிய அச்சம் வந்துவிட்டது. இன்றைக்கு 85%க்கும் அதிகமான புற்றுநோய்க்கு காரணம் உணவும் வாழ்வியல் சூழல் மாற்றமும் தான். எனவே உணவில் நாம் மிக மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“