சிறுதானியங்கள் மிகுந்த சத்து நிறைந்தவை. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடியவை. அவற்றை தினமும் எடுத்துக் கொள்ளலாம். சிறுதானியங்கள் குறித்த பேச்சு சமீபகாலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், எந்தச் சிறுதானியத்தில் எந்தச் சத்து உள்ளது என்பதை சித்த மருத்துவர் சிவராமன் விளக்கியுள்ளார்.
Advertisment
தமிழ் ஸ்பீச் பாக்ஸ் என்ற யூடியூப் சேனல் வீடியோவில் பேசியுள்ள சித்த மருத்துவர் சிவராமன் சிறுதானியங்கள் குறித்து தெரிவித்ததாவது;
சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் சாப்பிட்டு வந்தவை தான் சிறுதானியங்கள்.
இப்போது இருக்கும் மக்காசோளம் வெளிநாட்டிலிருந்து வந்தது. நம்மிடம் இருந்த வெண் சிறுசோளம். இதனைத் தான் அரிசிக்கு முன்னதாக நாம் அன்றாடம் அந்தக் காலத்தில் சாப்பிட்டு வந்தோம். சிறு சோளம் புரதச்சத்து நிறைந்தது. குழந்தைக்கு ஏற்றது.
கேழ்வரகில் உள்ள சிவப்பு நிறச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. பெண்கள், கைக்குழந்தைகளுக்கு மிகவும் பயன் தரக்கூடியது.
திணையில் பல சத்துக்கள் உள்ளன. திணை பொன்னிறமாக இருக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டின் சத்து கண் பார்வைக்கு ஏற்றது.
கம்பஞ்சோறு சாப்பிடுவது சிறந்தது. இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
குதிரைவாலியில் தயிர் சாதம் செய்தால் அருமையாக இருக்கும். புரதச்சத்து, நார்சத்து மிகுந்தது, பெரியவர்களுக்கு ஏற்றது.
வரகு அரிசி நார்சத்து, புரத சத்து மிகுந்தது, சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றது.
சாமை அரிசி பழுப்பு நிறமுடையது. நார்சத்து புரதச்சத்து மிகுந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“