கை நடுக்கம் வருவதை தடுக்க அடிக்கடி நம் உணவில் இந்தக் கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
Advertisment
இது தொடர்பாக சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்ததாவது; எப்போதாவது கை நடுக்கம் ஏற்படுகிறது என்றால், அது அன்றைக்கு சிறிய நரம்பு ரீதியிலான பிரச்சனையாக இருக்கும். அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் கை நடுக்கம் அடிக்கடி நிகழ்கிறது என்றால், அதுவும் சிறிய விஷயங்களைச் செய்யும்போது ஏற்பட்டால், கவனமாக இருக்க வேண்டும். இது ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாகும். மூளையின் வேதிச் சுரப்புகள் சரியாக செயல்படாவிட்டால் கை நடுக்கம் ஏற்படும்.
அதேநேரம் உடலில் சர்க்கரை அளவு குறைந்து ஆற்றல் கிடைக்காவிட்டால் கை நடுக்கம் ஏற்படும். அந்த நேரம் ஏதேனும் சர்க்கரை கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டால் அது சரியாகிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை மருந்துகள் எடுத்தப் பின்னர் சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை அளவு வெகுவாக குறைந்து விடும். இதனால் நடுக்கம், பதட்டம், வாய் குளறல் போன்றவை ஏற்படலாம். இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக சர்க்கரை மிகுந்த உணவுகளை சாப்பிட்டால் சரியாகிவிடும்.
ஹைப்பர் தைராய்டு எனப்படும் அதிக தைராய்டு சுரப்பு காரணமாகவும் கை நடுக்கம் ஏற்படும். நீண்ட கால மதுபழக்கம் உடையவர்களுக்கு கை நடுக்கம் ஏற்படும்.
Advertisment
Advertisements
அடுத்து நாம் சாப்பிடும் உணவுகளில் நம் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து, கனிமச் சத்துக்கள் இல்லாத நிலையில், இந்தச் சத்துக்கள் உட்கிரகிக்கப்படாமல் இருந்தாலும் கை நடுக்கம் ஏற்படும். நாள்பட்ட நோய் உள்ளவர்கள், நீண்ட நாட்களுக்காக வைரஸ் நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டவர்கள் சரியாக சாப்பிடாமல் இருந்து தேவையான சத்துக்கள் உடல் கிடைக்காத நிலையிலும் கை நடுக்கம் ஏற்படலாம்.
மனப்பதட்டம் காரணமாகவும் கை நடுக்கம் ஏற்படும். மனச்சோர்வுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாகவும் கைநடுக்கம் ஏற்படும்.
எனவே எப்போதாவது நடுக்கம் ஏற்படுவதை நினைத்து அச்சப்படத் தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களாக நடுக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
நடுக்கம் ஏற்படுவதை குறைக்க முருங்கைக்கீரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. நடுக்கத்தில் அதிக பாதிப்பைத் தரக்கூடியது பார்கின்சன் நோய். இதற்கு தீர்வாக பூனைக்காலி விதைகள் உள்ளன. இவ்வாறு சித்த மருத்துவர் சிவராமன் ஒரு யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“