பாகற்காயின் ஆரோக்கிய நன்மைகளுக்கு அதனை பொதுமக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால், அதன் இலைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. பாகற்காய் இலைகளில் ஏராளமான அன்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றன. பல வீட்டு வைத்திய முறைகளிலும் பாகற்காய் இலைகள் பயன்படுத்தப்படுகிறது. நவீன உணவு முறைகளிலும் பாகற்காய் இலைகள் கவனம் ஈர்த்து வருகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Six benefits of having karela leaves
பாகற்காய் இலைகளின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
இது குறித்த பல்வேறு தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா விவரித்துள்ளார். "இவற்றில் வைட்டமின்கள் ஏ, சி, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன" என்று அவர் கூறுகிறார்.
1. இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும், நீரிழிவு மேலாண்மைக்கு பயன்படுகிறது.
2. அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இதில் அதிகமாக இருக்கிறது.
4. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை அடைய இது பயன்படுகிறது.
5. இதில் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
6. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகளை வெளியேற்ற இது உதவி செய்கிறது.
பாகற்காய் இலைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்:
"பாகற்காய் இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, குறிப்பாக சர்க்கரை நோய் அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருத்தல் அவசியம். முதலாவதாக, நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அவை இரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைக்கும். மற்ற சர்க்கரை நோய் மருந்துகளுடன் இதனை எடுக்கும் போது ஹைப்போக்ளைசிமியாவிற்கு வழிவகுக்கும். எனவே, மருத்துவரின் ஆலோசனையை பெற்று இதனை பயன்படுத்த வேண்டும்" என கனிக்கா மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் இதனை குறைவான அளவு எடுக்க வேண்டும். இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். "கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், பாகற்காய் இலைகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம். பாகற்காய் சாப்பிடும் போது ஒவ்வாமை தொற்று ஏற்படுபவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது" என அவர் தெரிவித்துள்ளார்.
பாகற்காய் இலைகளை சில எளிமையான முறைகள் மூலம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம், பூண்டு மற்றும் மசாலாப் பொருட்களுடன் நறுக்கிய பாகற்காய் இலைகளை வதக்கி, சாதம் அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை சூப்புடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் ஊட்டச்சத்துகள் கூடுதல் பலன் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.