/indian-express-tamil/media/media_files/2025/04/10/dr-makudamudi-f-400899.jpg)
மருத்துவர் மகுடமுடி
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் முதுமையில் சந்திக்கக்கூடிய நோய்களை தங்களது இளம் வயதிலேயே சந்தித்து வருவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்கள், ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த பிறகுதான் வரும் என்ற நிலை மாறி தற்போது இளம் வயதிலேயே, பலரும் இந்த நோய் தாக்கத்திற்கு ஆளாகி மரணத்தை சந்தித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது இளைஞர்கள் அதிகம் சந்திப்பது இதய நோய் (மாரடைப்பு). சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு வந்து இறந்து போவது இப்போது பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் தான் என்று கூறியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் (வடக்கனந்தல்) பகுதியில் உள்ள வளர்மதி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மகுடமுடி, இதனை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/dr-makudamudi-182742.jpg)
இதய நோய் என்றால் என்ன? எத்தனை வகை இதய நோய்கள் உள்ளன?
இதயம் தொடர்பான பல நோய்கள் இணைந்தது இதய நோய். இதில் முக்கியமானது 4 வகைகள் உள்ளது.
ஹார்ட் அட்டாக்: இது இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த குழாயில் ஏற்படும் அடைப்புகளால் வருவது. இரத்த குழாயில் ஏற்படும் சுருக்கத்தின் காரணமாகவும் ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) வரலாம்.
வால்வுகள் கோளாறு: இது பிறவியிலேயே வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ருமாட்டிக்ஃபீவர் காரணமாகவும் வரும். தொற்றுகள் காரணமாக வால்வுகள் கோளாறு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
கன்டெக்டிங் சிஸ்டம் (இதய மின்கடத்திகள்): இதயம் சரியாக இயங்குவது. ஒரு நாளைக்கு 72 முறை துடிப்பது, அதிகமாக வேலை காரணமாக துடிப்பை அதிகப்படுத்துவது, தூங்கும்போது துடிப்பை குறைப்பது என அதற்கான வேலைகளை சரியாக செய்ய வேண்டும். இதில் மாற்றம் ஏற்படும்போது இதயம் பாதிக்கப்படும். அப்போது சாதாரண நிலையிலும் இதயம் அதிகமாக துடிக்கும்.
தசைகள் பிரச்னை: இதயத்தில் உள்ள தசைகளில் வீக்கம் ஏற்படும்போது இதயம் பாதிக்கப்படும். அதேபோல் இதயத்தின் பாதுகாப்பிற்காக அதனை சுற்றி நீர் இருக்கும். பெரிகார்டியல் திரவம் என்ற இந்த நீர் அளவு அதிகமாகும்போதும், வற்றும்போதும் இது போன்ற இதய பிரச்னைகள் உருவாகும். இவை அனைத்தும் இதயம் சார்ந்த நோய்கள் ஆகும்.
இதய நோய்களுக்கான அறிகுறிகள் என்னென்ன?
இதய நோய்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு அறிகுறிகள் உள்ளது. மாரடைப்பு வந்தால், மார்பின் நடு பகுதியில் ஒரு யானை வந்து மிதித்தால் எந்த அளவுக்கு அழுத்தம் இருக்குமோ, அந்த அளவுக்கு வலி இருக்கும். இந்த வலி, கீழ் தாடை, தோல்பட்டை, முதுகுபக்கம் என ஒரு சில இடங்களில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சராசரி மனிதருக்கு இந்த அறிகுறிகள் இருக்கும். அதே சமயம், சர்க்கரை நோயாளியாக இருந்தால் இந்த அறிகுறிகள் எதுவும் அதிகம் வெளியில் தெரியாது. லேசாக நெஞ்சு கரிக்கின்ற மாதிரி இருக்கும். உடனடியாக சோர்வான நிலைக்கு வந்துவிடுவார்கள். சர்க்கரை நோயாளிகள் இது சாதாரணமானது தான் என்று நினைத்து அஜாக்கிரதையாக இருந்துவிடுவார்கள். இது ஹார்ட் அட்டாக் என்று அவர்களுக்கு தெரியாது 2-3 நாட்கள் கழித்து தான் அவர்களுக்கு தெரியவரும்.
இதுவே வால்வுகள் கோளாறு என்றால் படிப்படியாக அறிகுறிகள் வரும். முதலில் மூச்சு வாங்குவது, நெஞ்சு படபடப்பது, உடல் சோர்வு, ஆகிய அறிகுறிகள் படிப்படியாக தெரியவரும். கண்டெக்டிங் சிஸ்டம் (இதய மின்கடத்திகள்) பாதிக்கப்படும்போது, உடலில் பல்ஸ் ரேட் அதிகமாகும். 70-80 வரை இயல்பானது. இதில் 40-க்கு கீழ் குறைவும்போது அறிகுறிகள் தெரியவரும். மயக்கம் வரும் உடல் சோர்வு ஏற்படும். அதிலும் சிலருக்கு இந்த பல்ஸ் ரேட் 200-ஐ தாண்டி ஓட தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது எனர்ஜி வீணாகும். உடல் சோர்வு ஏற்படுவது, மூச்சு வாங்குவது, இதய படபடப்பு, நெஞ்சில் பாரம் அதிகமாக இருப்பது போன்று இருக்கும். இவை அனைத்தும் இதய நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரியவரும்போது ஒவ்வொருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
என்ன மாதிரியான பழக்கம் இதயம் பலவீனமாக காரணமாக இருக்கலாம்?
மரபணு சார்ந்த இதய நோய் இருக்கிறது. அதன்பிறகு உணவு முறைகள் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. ஃபார்ஸ்ட் புட் எடுத்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட பாட்டில் பானங்கள் குடிப்பது, மதுபானங்கள், போதை பொருட்கள் பயன்படுத்துவது, கஞ்சா, புகைப்பிடிப்பது, ஆல்கஹால் குடிப்பது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். முக்கியமாக இளம் வயதில் அதிகமாக டென்ஷன் ஆவதும் இதயத்தை அதிகம் பாதிக்கும் ஒரு முக்கிய விஷயமாக சொல்லலாம். இளைஞர்கள் அதிகம் டென்ஷன் மற்றும் கோபப்படும்போது ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாகி, ரத்தகுழாயை பாதிக்கும். இதன் காரணமாக ரத்த குழாய் சுருக்கமாகி, அதில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வயதானவர்களை விட இப்போது இளைஞர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் இதற்கு காரணம் என்ன?
வயதானவர்களுக்கு மாரடைப்பு வருவது, வயது மூப்பு, சர்க்கரை நோய், சத்து குறைபாடு, அதிகமான வயது காரணமாக, ரத்த குழாயில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக 60 வயதிற்கு மேல் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது, 20 வயதில் சமீபத்தில் 13 வயது பையன் மற்றும் 16 வயது பொண்ணுக்கும் மாரடைப்பு வந்துள்ளது. நெஞ்சுவலி வரும்போது இந்த வயதில் மாரடைப்பு வருமா என்று யோசிக்கமாட்டார்கள்.அனைத்து வகையான டெஸ்ட்களும் எடுத்த பிறகு, இளம் வயதில் மாரடைப்பு இருப்பது தெரியவருகிறது.
இவர்களுக்கு சிறுவயதிலேயே இந்த பாதிப்பு வருவதற்கு முக்கிய காரணம், சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு இருக்கும் மன உளைச்சல் தான் காரணமாக இருக்கிறது. அடுத்து உணவு பழக்கம். பதப்படுத்தப்பட்ட பாட்டில் பானங்கள், மது பழக்கம், மற்றும் பல தேவையில்லாத பழக்கங்களும் இதற்கு காரணமாக இருக்கிறது. சிறுவயதில், புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது போன்ற பழக்கங்களால் இரத்த குழாயில் சுருக்கம் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படும். அதனால் இவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
இதய நோய் பாதிப்பு இதயம் பலவீனமானவர்கள் அதில் இருந்து மீண்டு வர வழி இருக்கிறதா?
இதயம் பலவீனமானவர்கள் என்றால் எதற்கெடுத்தால் பயப்படுவார்கள். இந்த பயம் காரணமாகவே அவர்கள் இதயம் பலவீனமாகிவிடும். ஆனால் இதில் இருந்து மீண்டு வருவது மிக மிக சுலபமானது. இதற்காக மிகவும் குறைந்த செலவில் சிகிச்சை, அல்லது செலவே இல்லாத சிகிச்சை, மிகவும் எளிமையானது, நம்மால் முடியும் என்பது என்னவென்றால் வருமுன் காப்பது தான். இதுதான் மிகவும் எளிமையான சிகிச்சை முறை. நமது கலாச்சார உணவு, நமது உழைப்புக்கேற்ற உணவு, நமக்கு தேவையான உணவு என்ன? காய்கறிகள், கீரைகள், எதில் சத்து அதிகமாக இருக்கிறது என்பதை ஓரளவு வகைப்படுத்தும் சிந்தனைகள் வேண்டும்.
மற்ற எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். உலக அறிவை தெரிந்துகொள்கிறோம். ஆனால் நமது கலாச்சார உணவுகள் குறித்து தெரிந்துகொள்ள நினைப்பதே இல்லை. நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவு எது, என்பதை புரிந்துகொண்டு, அதனை தேர்வு செய்யும் ஆற்றல் நமக்கு வேண்டும். அடுத்து மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அதன்பிறகு சரியான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மாரடைப்பால பாதிக்கப்பட என்ன காரணம்?
பள்ளி கல்லூரி மாணவர்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தான். எல்.கே.ஜி வகுப்பில் தொடங்கி அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, விளையாட்டு என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு வளர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். நாள் முழுவதும் படிப்பு படிப்பு படிப்பு என்றும், டாக்டர் ஆகனும், இஞ்சினியர் ஆகனும், சம்பாதிக்கனும் என்றே சொல்கிறார்கள். இதை பெற்றோர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் நல்லா இருக்கணும், நல்லா சம்பாதிக்கனும், வசதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, அவர்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். எல்லா பெற்றோரும் இதை யோசிக்க வேண்டும். பிள்ளைகள் முக்கியமாக விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதெல்லாம் மிகவும் முக்கியமானது. அவர்கள் உடல் உழைப்பு சரியாக இருக்கிறதா? நன்றாக சாப்பிடுகிறார்களா?. உடல் ஆரோக்கியத்தற்கு தேவையான சத்தான் உணவை சாப்பிடுகிறார்களா?, உடலுக்கு எந்த உணவு ஆபத்தானதோ அதை தவிர்த்துவிடுகிறார்களா? என்று கவனித்து வந்தால் இதுதான் மிகச்சிறந்த தடுப்புமுறை.
இதய நோயாளிகள் என்ன மாதிரியான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்?
ஒருவர் இதய நோயாளியாக இருந்தால் அவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் 5 வெள்ளை பொருட்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அது உப்பு, சர்க்கரை, தேங்காய், பால், அரிசி ஆகிய 5 பொருட்கள் ஆகும். சர்க்கரை நோயாளியாக இருந்தால் சர்க்கரையை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். அரை சர்க்கரை, கால் சர்க்கரை, நாட்டு சர்க்கரை என எதையும் பயன்படுத்த கூடாது. உப்பை பயன்படுத்தும்போது எப்போதும் பயன்படுத்துவதை விட பாதி அளவில் தான் பயன்படுத்த வேண்டும்.
அரிசியில் சாதம், அல்லது கோதுயைாக இருந்தாலும், அதில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனால் அவற்றை சாப்பிடும் அளவை குறைத்துவிட வேண்டும். இதனை 50 சதவீதம் குறைத்துவிட வேண்டும். மற்றும் ஒரு 50 சதவீதத்தை பாதுகாப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் என்றால், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சீதா, சப்போட்டா போன்ற பழங்களை தவிர்த்துவிட வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களை பாதி அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக கொய்யா பழத்தை செங்காயாக சாப்பிடலாம். பப்பாளிப்பழம் ஒரு கீற்று சாப்பிடலாம். காபி டீ அதிகமாக குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு, 2 சாபி அல்லது 2 டீ, ஒரு கப் பால் என்ற அளவில் குறைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக சர்க்கரை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தேங்காய்யை நாம் குழம்புக்கு சேர்க்கும் அளவை தவிர அதிகளவு எடுத்துக்கொள்ள கூடாது. இந்த 5 வெள்ளை பொருட்களை இப்படி எடுத்துக்கொண்டால் உணவுப்பொருட்கள் சரியாக இருக்கும். இதில் பிபி (இரத்த கொதிப்பு) இருந்தால் உப்பை குறைத்துக்கொள்ள வெண்டும்.
சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் எப்படி சார் என்று கேட்கிறார்கள். சர்க்கரையும் இனிப்பும் நாம் சாப்பிடும் உணவில் 10 சதவீதம் தான் சேரும். மீதி 90 சதவீதம் நாம் சாப்பிட வேண்டிய நிறைய பொருட்கள் உள்ளது. ஒரு பொருளை பார்த்துவிட்டு இதை சாப்பிடலாமா என்று யோசிக்கிறார்களே தவிர, ஏன் சாப்பிட வேண்டும் என்று யோசிக்கமாட்டேன்கிறார்கள். ஓரளவுக்கு மேல் ஒரு வியாதி என்று வந்துவிட்டால், வியாதி வரவில்லை என்றாலும், வள்ளுவர் சொன்னது போல் யாகாவராயினும் நாகாக்க என்பது வார்த்தைக்கு மட்டும் அல்ல நாவின் சுவைக்கும் சேர்ந்தது தான். அந்த சுவையை அடக்கி நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் வியாதி நமக்கு வராது. அப்படியே வந்தாலும் அதனை நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
இதய நோயாளிகளுக்கு அதனுடன் தொடர்புடைய வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதா?
உடலில் இதயம் தான் மெயின் டிரான்ஸ்ஃபார்மர். அதில் இருந்துதான் மற்ற உறுப்புகளுக்கு கனெக்ஷன் செல்கிறது. உடலுக்கு தேவையாக அத்தனை சத்து பொருட்களும், ஆக்ஸிஜனும், இதயத்தில் இருந்து தான் செல்கிறது. இதய நோய் வந்து அதன் பலம் குறையும்போது, மற்ற உறுப்புகளுக்கான செயல்பாடுகளும் குறைய தொடங்கும். மற்ற உறுப்புகள் இயங்கவில்லை என்றால் உடலின் செயல்பாடு குறையும். இதன் மூலம் மூளை, கண், கிட்னி போன்ற உறுப்புகளில் பிரச்னை வரலாம். மற்ற உறுப்புகளின் சக்தியும் குறையும் என்பதால், மற்றவர்கள் போல் ஆக்டீவாக இருக்க முடியாது.
தனக்கு இதய நோய் உள்ளது என்பதை ஒருவர் எப்படி தெரிந்து கொள்வது?
உடலில் ஒரு பாதிப்பு வருகிறது என்றால், உடல் நமக்கு சொல்லும், அதனை நாம் சிறிது உணர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொஞ்ச தூரம் நடந்து சென்றால் மூச்சு வாங்கும். உடல் சோர்வாக இருக்கும்.மார்பு பகுதியில் லேசாக பராமாக இருக்கும். இந்த வலி அப்பப்போ சரியாக போய்விடும் என்பதால் அதை பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இது மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதில் 2 வகை உள்ளது. ஒன்று படிப்படியாக அதிகரிப்பது. மற்றொன்று திடீரென்று ஆரம்பிப்பது.
சாதாரணமாக ஒரு கிலோமீட்டர் நடந்து செல்லும் ஒருவர் இதய நோய் பாதிப்பு வரும்போது, 500 அடி நடந்து சென்றாலே மூச்சு வாங்கும். நெஞ்சில் பாரம் அல்லது தாடைப்பகுதியில் வலி ஏற்படும். தோல்பட்டையில் வலி உருவாகும். இந்த அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக செக்கப் செய்வது அவசியம். வேறொரு காரணங்களாலும் இந்த அறிகுறிகள் இருக்கலாம். ஆனால் இது இதயம் சார்ந்ததா என்பதை தெரிந்துகொள்ள, இசிஜி, டி.எம்.டி, ஏ.எம், எக்கோ சோதனைகள் செய்தால் தெரிந்துவிடும்.
உணவு கட்டுப்பாடு, தேவையான மாத்திரைகள், சரியான உடற்பயிற்சி இருக்க வேண்டும். 2-வது ஸ்டேஜில், 500 அடி நடந்த ஒருவர் 100 அடி நடந்தாலே மூச்சு வாங்கும். அப்போது சிகிச்சை எடுத்துக்கொண்டாலே அடுத்த ஸ்டேஜ் போகாமல் தடுக்கலாம். 3-வது ஸ்டேஜ், 10 அடி தூரம் நடந்தாலே முடியாமல் போகும். அதன்பிறகு, குனிந்து வேலை செய்தாலே மார்பில் வலி ஏற்படும். சின்ன சின்ன வேலைகள் செய்தாலே வலி ஏற்படும். இந்த நிலை இருக்கும்போது சிகிச்சை எடுத்துக்கொண்டாலே சரியாக இதய நோயை கட்டுப்படுத்தலாம். ஸ்டேஜ் 4-ல், கடைசிகட்டம். இந்த நிலையில் அவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம்.
அடுத்து கார்டியாக் அரஸ்ட் என்று சொல்வார்கள். இது இதய தசைகளில் ஏற்படும் பாதிப்பு. இந்த பாதிப்பு பொதுவாக கன்டெக்டிங் சிஸ்டம் காரணமாக வருவது. இந்த பாதிப்பு ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம் திடீரென நின்றுவிடும். அப்போது இதயமும் நின்றுவிடும். அடுத்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தம் செல்வது நின்றுவிடும். அடுத்த 5 நிமிடத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் காப்பாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரிவதற்குள்ளே 5 நிமிடங்கள் முடிந்துவிடும்.
ஒரு சிலர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து தவறாமல் செய்வார்கள். ஆனால் ஒரு நாள் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, அதை நினைத்து வருத்தப்படுவார்கள், டென்ஷன் ஆகிவிடுவார்கள். இந்த ஒருநாள் செய்ய முடியாததை 10 நாட்கள் நினைத்துக்கொண்டிருப்பது உடலுக்கு நல்லது அல்ல. இதன் மூலமாக ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அதனால், நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வு கொடுக்க வேண்டும். நமது உடலுக்கு 50 சதவீதம் நாம் தான் டாக்டர். நமது உடல் ஏற்றுக்கொள்ளாத உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.
இதய நோய் வராமல் தடுக்க தனியாக உடற்பயிற்சி முறைகள் இருக்கிறதா?
இதய நோய் வராமல் தடுக்க, சிறப்பான ஒரு உடற்பயிற்சி வாக்கிங் தான். வேகமாக நடப்பது நல்லது. குறிப்பாக வயதுக்கு ஏற்றபடி நடை பயிற்சி செய்ய வேண்டும். வாக்கிங், ஃபார்ஸ்ட் வாங்கிங், ஜாகிங் இவை செய்தாலே நோய் வராமல் தடுக்கலாம். உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இதய நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்?
காய்கறிகள் 50 சதவீதம், சாப்பாடு 50 சதவீதம் இருக்க வேண்டும். சாதம் 50 சதவீதம் எடுத்துக்கொண்டு, மீதமுள்ள 50 சதவீதம், கூட்டு பொறியல், சர்க்கரை நோய் இல்லை என்றால், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். சாலட் அதிகமாக சாப்பிட வேண்டும். குறிப்பாக காய்கறிகள் சாலட் உடலுக்கு மிகவும் நல்லது. சாதம் கார்போஹைட்ரேட் நிறைந்தது. அதை அளவுடன் எடுத்துக்கொண்டு காய்கறிகளை நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். 10 பாதாம், 5 பிஸ்தா, சர்க்கரை இல்லை என்றால் 2 பேரிட்சம் பழம் சாப்பிடலாம்.
வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். பட்ஜி, போண்டா போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. கடைகளில் சாப்பிடுவது இன்னும் ஆபத்தானது. வாக்கிங் போய்விட்டு வந்து கடைசிகளில் பொங்கல் வடை சாப்பிடுவார்கள். இதை தவிர்த்துவிட வேண்டும். ஹோட்டல் சாப்பாட்டை முடிந்வரை தவிர்த்துவிட வேண்டும். இயலாத பட்சத்தில், சைவ உணவை சாப்பிடுவது நல்லது. சில்லி, மஞ்சூரியன் போன்ற சுவைக்காக போடக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. நாம் சொல்வதை நாக்கு கேட்க வேண்டும். நாக்கு சொல்வதை நாம் கேட்க கூடாது.
பரம்பரை இதய நோய் பிறக்கும் குழந்தையை பாதிக்குமா?
பரம்பரை இதய நோய் என்பது கொஞ்சம் ரேரான விஷயம். ஒரு சதவீதம் தான் இது நடக்கும். இப்போது கருவிலே குழந்தைக்கு என்ன பாதிப்பு என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொள்வது, குடும்பத்தில், மூத்தவர்களுக்கு இதய நோய் இருந்திருந்தால், பிறக்கும் குழந்தைக்கு வால்வு கோளாறுகள், இரத்த குழாய்கள் மாறி இருப்பது, குழாய்கள் மூடிதான் பிறக்க வேண்டும். ஆனால் மூடாமல் பிறப்பது இதயம் தொடர்பான பாதிப்பு, சில தடுப்பூசிகளை போடாமல் இருப்பது இந்த 4 கோளாறுகளும் ஒன்றாக சேர்ந்து பிறக்கும் குழந்தைகளும் இருக்கின்றன. இது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த பிரச்னை கண்டிப்பாக வரும் என்று சொல்ல முடியாது. 1 சதவீதம் தான் இப்போது இதுபோன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.
இளைஞர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட பெற்றோர்கள் எப்படி காரணமாகிறார்கள்? இதை தடுக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இளம் வயதில் இப்போது மாரடைப்பு அதிகமாக வருகிறது. இதை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். பெற்றோர்களின் நோக்கம் இப்போது பணத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை வழிநடத்துகிறார்கள். அதனால் அவர்களுக்கு உடற்பயிற்சியே இல்லாமல் போய்விடுகிறது.
எல்.கே.ஜி படிக்கும்போது பள்ளியை விட்டு வந்தவுடனே பல டியூஷன்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். உணவுமுறையில் பெற்றோர்கள் சரியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை அவர்களும் சாப்பிட்டு, பிள்ளைகளுக்கும் அந்த பழக்கத்தை உண்டாக்க வேண்டும். பெற்றோர், பரோட்டா, சில்லி, பானிப்பூரி என்று சாப்பிட்டால் பிள்ளைகளும் அதைதான் சாப்பிடுவார்கள். அதனால் பெற்றோர்கள் முதலில் மாற வேண்டும். புகைபிடிக்க கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் பாதகங்களை சொல்லி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முறையாக வளர்க்க வேண்டும்.
அதேபோல் தனது பிள்ளையின் நண்பர்கள் வட்டாரங்கள், எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆல்கஹால் குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதில் இருக்கும் கெட்டதை சொல்லி, வாழ்க்கை ஒரு இன்னிங்ஸ் தான், எவ்வளவு மார்க் எடுத்து பெரிய பதவியில் இருந்தாலும், இளம் வயதில் மரணித்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பிள்ளைகள் வளர்வதற்கு பெற்றோரே ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் சண்டை போட்டு பிள்ளைகளை டென்ஷன் ஆக்காமல், நமது பாரம்பரிய உணவு முறைகளை கடைபிடித்து அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் பங்கேற்க வைக்க வேண்டும். நமது வாழும் நிலை உணர்ந்து, காலச்சூழலை அறிந்து, நமக்கு என்னென்ன தேவை என்பதை தெரிந்து நடந்தால், நாம் அனைவரும் வளமோடு, நலமோடு, நூறாண்டு வாழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.