கல்யாண விருந்துகள் என்றாலே நினைவுக்கு வரும் முதல் இனிப்பு பாயாசம்தான். பாயாசம் இல்லாமல் ஒரு பந்தி முழுமையடையாது. அதிலும் குறிப்பாக, பலாப்பழ பாயாசம் செய்துவிட்டால், அதன் சுவை வீட்டையே மணக்கச் செய்து, சமைத்த உடனேயே காலி ஆகிவிடும். இந்த அருமையான பலாப்பழ பாயாச ரெசிபியை மறக்காமல் சேமித்து வைத்து, வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
நறுக்கிய பலாப்பழ துண்டுகள் - 2 கப்
வெல்லம் - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
தேங்காய் பால் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10-15
உலர் திராட்சை - 10-15
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீருடன் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதே கடாயில், நறுக்கிய பலாப்பழ துண்டுகளைச் சேர்த்து, தீயை மிதமாக வைத்து, பலாப்பழம் மென்மையாகும் வரை வதக்குங்கள். தேவைப்பட்டால், ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்க்கலாம். பலாப்பழம் நன்கு வெந்ததும், வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலைச் சேர்த்து, வெல்லப் பாகு பலாப்பழத்துடன் நன்கு சேரும் வரை கிளறவும்.
இப்போது, ஒரு கப் கெட்டியான தேங்காய் பாலைச் சேர்த்து, தீயை குறைந்த அளவில் வைத்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். தேங்காய் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.
கடைசியாக, வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இந்த பலாப்பழ பாயாசம் சூடாகவும், குளிர வைத்தும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். விசேஷ நாட்களில் விருந்தினர்களை அசத்த இந்த பாயாசம் நிச்சயம் உதவும்!