நான்-வெஜ் உணவுகளில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், பூரிக்கு ஒரு அருமையான காம்பினேஷன் என்றால் அது உருளைக்கிழங்கு மசாலா தான். அதை எளிமையாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 4 கொத்து
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில், அரை கிலோ உருளைக்கிழங்கை எடுத்து, குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து, 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். இதேபோல் தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது குழைந்து வரும் வரை வதக்கவும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். வதங்கிய வெங்காயம், தக்காளி கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.