இன்றைய நாட்களில், தக்காளி சாதம் என்ற பெயரில் பட்டை, கிராம்பு, கரம் மசாலா போன்றவற்றைச் சேர்த்து, பிரியாணி சுவையில் ஒரு குஸ்கா போலச் செய்து சாப்பிடுகிறார்கள். உண்மையான தக்காளி சாதம் என்பது தக்காளியின் மணத்துடன் சாப்பிட வேண்டும். அந்த வகையில் தக்காளி சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த பெரிய தக்காளிகள் - 3
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
துருவிய இஞ்சி - சிறிதளவு
துருவிய பூண்டு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு
சாதம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மூன்று நன்கு பழுத்த பெரிய தக்காளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் காம்புப் பகுதியை நீக்கிவிட்டு, மிக்சியில் அல்லது சப்பரில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது அடுப்பை ஆன் செய்து, ஒரு கடாயை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், சோம்பு மற்றும் ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு, துருவிய இஞ்சி, துருவிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும்.
அதன் பிறகு, நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அதிகமாக வதக்காமல், கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.
தண்ணீர் வற்றும் வரை நன்கு கலந்துவிட்ட பிறகு, ஒரு மூடி போட்டு சுமார் பத்து நிமிடங்கள் வேக விடவும். பத்து நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறிவிடவும்.
எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும், அடுப்பை அணைத்து, இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, சமைத்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்துச் சாப்பிடுங்கள். தக்காளியின் நறுமணமும், கொத்தமல்லியின் சுவையும் சேர்ந்து அட்டகாசமாக இருக்கும்.