Tamil Recipe Update : இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக எடுத்துக்கொள்ளும் முக்கிய உணவுகளில் ஒன்று இட்லி. அரிசி மாவு உளுத்தம்மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து புளிக்க வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் இட்லி உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இதில் ரவா இட்லி, சாம்பார் இட்லி, சேமியா இட்லி என பலவகைகளில் செய்யப்படுகிறது. இவை அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. அந்த வகையில் சாம்பார் இட்லி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா…?
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 2 கப், துவரம் பருப்பு – அரை கப், பரங்கிக்காய் – சிறிய துண்டு. சின்ன வெங்காயம் – 12, தக்காளி – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், புளி – சிறிய உருண்டை, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 6, தனியா – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கொப்பரை – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
இட்லியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து பரங்கிக்காய் துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து குழையும் அளவுக்கு வேக வைக்கவும். அடுத்து வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். புளியை அரைக்கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் போட்டி எண்ணை விடாமல் வறுத்து மிக்சியில் அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், தாளிக்க கொடுத்துள்ள கடுகு உறுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
கடுகு பொறிந்ததும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சிவந்ததும், தக்காளி சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கும்போது தக்காளி நன்றாக வதங்கும். தக்காளி வதங்கியதும் புளித்தண்ணீரை சேர்த்து அதனுடன் கருவேப்பிலை பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
நன்றாக கொத்தித்தவுடன், வேகவைத்த பருப்பு பரங்க்கங்காய் கலவை அரைத்த பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கிவிட வேண்டும். அதன்பிறகு ஒரு கிண்ணத்தில் இட்லியை வைத்து அதன்மீது சாம்பரை ஊற்றி கொத்தமல்லி இலை மற்றும் நெய் சேர்த்து பரிமாறலாம். சுவையாக சாம்பார் இட்லி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”