பழங்காலத்தில் பயன்படுத்திய இயற்கை மருத்துவ தாவரங்களில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு உண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள நிறைந்த இந்த வெற்றிலையை சுண்ணாம்பு, பாக்குடன் சேர்த்து மென்று சாப்பிடும்போது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.
தற்போது விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்திருந்தாலும், கிராமங்களில் பலரும் வெற்றிலை பாக்கு சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். வெற்றிலையுடன் பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவது எந்த அளவிற்கு நன்மை தருகிறதோ அதே அளவு நன்மைகள் வெற்றிலையை மட்டும் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கும்போதும் கிடைக்கிறது.
இது குறித்து காசியாபாத் ஸ்வர்ண ஜெயந்தியின் ஆயுர்வேதாச்சார்யா டாக்டர் ராஹுத் சதுர்வேதி கூறுகையில், வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் உடலில் உள்ள கப தோஷம் நீங்கும். இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கூடுதலாக, இது உடலில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
வெற்றிலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
செரிமான பிரச்சனைகளுக்கு வெற்றிலை நீரை அருந்தலாம். இது தவிர, இன்னும் பல நன்மைகள் உள்ளன.
செரிமானத்தை மேம்படுத்தும்
வெற்றிலை நீரை உட்கொள்வதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்த முடியும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகிய இரண்டும் குணமடைய வெற்றிலை நீர் நிவாரணம் தருகிறது. இந்த வகையான பிரச்சனை உங்களுக்கு இருந்தால் வெற்றிலை தண்ணீரை தயார் செய்து குடிக்கலாம்.
இருமல் நிவாரணம்:
சளி மற்றும் இருமல் அறிகுறிகள் இருந்தால் அவற்றை போக்க வெற்றிலை நீர் உதவும். கூடுதலாக, இது சளி மற்றும் தொண்டை புண்களை அகற்றும். வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு குணங்கள் தொண்டை வலியை போக்க உதவுகிறது. மார்பில் படிந்திருக்கும் சளியை நீக்கவும் இது உதவும்.
மலச்சிக்கல் பிரச்சனையை போக்க:
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு வெற்றிலை நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடல் இயக்க பிரச்சனைகளை குறைக்கிறது. உடல் அழற்சியைக் குறைக்கும். ஆனாலும் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சினைகளை சந்தித்தால், நீங்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த:
வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்களைக் குறைக்கும். இத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நீர் ஆரோக்கியமானதாக இருக்கும்.
வெற்றிலை தண்ணீர் தயாரிப்பது எப்படி?
வெற்றிலை தண்ணீர் தயாரிப்பது மிகவும் எளிமையானது. முதலில் 5 முதல் 6 வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு அதனை நீரில் நன்கு கழுவவும். அதன் பிறகு ஒரு கடாயில் மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் வெற்றிலை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அதனை வடிகட்டி, ஆறவிடவும். தண்ணீர் ஆறியவுடன் குடிக்கலாம். தினமும் மூன்று முறை குடிக்கவும். இது உடலில் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
வெற்றிலையில் தயாரிக்கப்படும் தண்ணீரைக் குடிப்பதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “