பல்வேறு நன்மைகள் அடங்கிய முருங்கைக்கீரையில் பல வகையான உணவுகள் செய்யலாம். அந்த வகையில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் முருங்கை கீரை சூப். மாலை நேரத்தில், இரவு உணவுக்கு சுமார் 1.5 மணி நேரத்திற்கு முன்பு, ஒரு கிண்ணம் சூப்பை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இது மிகவும் சத்தான மற்றும் சுவையான சூப் ஆகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கில் விற்கப்படும் இந்த சூப்பை, இனி உங்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மசூர் பருப்பு (பிங்க் நிற மைசூர் பருப்பு) - 100-150 கிராம்
முருங்கைக்கீரை - தேவையான அளவு (சுத்தம் செய்து, ஆய்ந்து வைத்தது)
கடலை எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
பட்டை - 2-3 துண்டுகள்
கிராம்பு - 6-8
ஏலக்காய் - 8
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்ஸ்டார் அனிஸ் - 4
பூண்டு - தேவையான அளவு (தோலுடன் இடித்தது)
பச்சை மிளகாய் - 4-5 (இடித்தது)
கல்பாசி - 10-15 கிராம்
வெங்காயம் - 1 (பெரியதாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
செய்முறை:
குக்கரில் 100-150 கிராம் மசூர் பருப்பை எடுத்து, 1 பங்கு பருப்புக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து, 6 விசில் வரும் வரை குழைய வேக வைத்து தனியே வைக்கவும். ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து பொரிய விடவும். பின்னர் சோம்பு, மிளகு, ஸ்டார் அனிஸ் சேர்த்து வதக்கவும்.
இடித்த பூண்டு மற்றும் இடித்த பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும். இடித்த பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்ப்பது சூப்புக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். அடுத்து கல்பாசியையும் சேர்த்து வறுக்கவும். முருங்கைக்காயைத் துருவி அல்லது மெல்லியதாக நறுக்கி வதக்கிக் கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்க்கவும்.
பின்னர் பெரியதாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கிய மசாலாவுடன் வேகவைத்த மசூர் பருப்பைச் சேர்க்கவும். சுமார் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
இந்த கலவையை சுமார் 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இதன் மூலம் அனைத்து பொருட்களின் சத்தும் சூப்பில் இறங்கும். மற்றொரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்க்கவும். இது கீரையின் நிறம் மாறாமல் பச்சை பசேலென இருக்க உதவும். சுத்தம் செய்து வைத்திருக்கும்
முருங்கைக்கீரையை கொதிக்கும் நீரில் போட்டு, 10 வினாடிகள் மட்டும் வைத்து உடனடியாக வெளியே எடுக்கவும். கீரையின் சூட்டைத் தணிப்பதற்காக, உடனடியாக ஓடும் குளிர்ந்த நீரில் காட்டவும். ப்ளான்ச் செய்த முருங்கைக்கீரையை ஒரு மிக்ஸியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்து கொண்டிருக்கும் பருப்பு-முருங்கைக்காய் கலவையில் அரைத்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். தயாரான சூப்பை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்கு வடிகட்டவும். வடிகட்டிய பின் சக்கை மட்டும் எஞ்சும். இதில் உள்ள அனைத்து சத்துக்களும் சூப்பில் இறங்கிவிட்டதால், சக்கையை நீக்கிவிடலாம். மீண்டும் ஒருமுறை, மெல்லிய வடிகட்டி மூலம் சூப்பை வடிகட்டலாம்.
வேகவைத்த முருங்கைக்காயில் சுமார் 10 துண்டுகளை எடுத்து, அதன் உள்ளே இருக்கும் சதையை ஒரு ஸ்பூன் கொண்டு சுரண்டி சூப்பில் சேர்க்கவும். இது சூப்பிற்கு ஒரு அற்புதமான சுவையையும், தடிப்பையும் கொடுக்கும். சாப்பிடும் போது முருங்கையின் சதை வாயில் கிடைப்பது குழந்தைகளுக்குப் பிடிக்கும்.