நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று தட்டைப்பயறு. இதற்கு காராமணி, என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒரு சத்தான பயறு வகையாக இருக்கும் அதில், பலவிதமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. தட்டைப்பயறில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால், இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
குறைந்த கலோரிகள் கொண்ட இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். தட்டைப்பயறில், கரோட்டினாய்டுகள், ஃபிளவனாய்டுகள், மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இதில் கொழுப்பின் அளவு மிகக் குறைவு என்பதும் ஒரு கூடுதல் நன்மை. மேலும், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த தட்டைப்பயறு வைத்து சுவையான சாதம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெய் - 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
இஞ்சி 1 டீஸ்பூன்
பூண்டு 2 பல்
வெங்காயம் 2
தக்காளி 1
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் 3/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தட்டை பயறு 100 கிராம்
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஆகியவற்றறை சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன்பிறகு நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு, ஊறவைத்த தட்டைப்பயறு சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு, 3 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன், ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து 4 விசில் வரை சமைக்கவும். அதன்பிறகு குக்கரை ஆப் செய்துவிட்டு, தயிர் அல்லது வேறு எந்த காய்கறியுடனும் சேர்த்து பரிமாறலாம்.