தென்னிந்தியாவில் பிரபலமான அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று ரசம். விருந்து நிகழ்ச்சிகளில், உணவு சாப்பிட்டு முடிக்கும்போது இறுதியாக ரசம் சாப்பிடுவார்கள். செரிமானத்திற்கு உதவும் இந்த ரசத்தை பல வழிகளில் செய்வார்கள். ரசத்திலும் பல வகைகள் உள்ளன. அந்த வகையில், சுட்ட பூண்டு மற்றும் வரமிளகாய் வைத்து ஒரு ரசம் செய்வோம்.
தேவையான பொருட்கள்:
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு – 2 கட்டி
வரமிளகாய் – 5
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்துக்கொள்ளவும். அடுத்து பூண்டு மற்றும் வரமிளகாயை நெருப்பில் வேக வைத்து எடுத்துக்கொண்டு, பூண்டை தோல் உறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு உரலில், மிளகு சீரகம் சேர்த்து நன்றாக இடித்து அதில் வேக வைத்த பூண்டு மற்றும் வரமிளகாயை சேர்த்து இடிக்கவும். அடுத்து ஊறவைத்துள்ள புளியை நன்று கரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
அடுத்து இடித்து வைத்துள்ள மிளகு சீரக கரைசலை அதில் சேர்த்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு, ஒரு கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பெருங்காய பொடி சேர்க்கவும்.
இறுதியாக புளி கரைசலை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நுறை கட்டியவுடன் இறக்கினால் சுவையான ரசம் தயார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.