/indian-express-tamil/media/media_files/2025/01/09/SyyL6jgFWHrG6d9Vtlys.jpg)
ப்ராய்லர் கோழி நல்லதா கெட்டதா என்ற குழப்பம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனாலும் இந்த கோழியை பலரும் விரும்பி சாப்பிடுகிறார். அதே சமயம் இந்த கோழியில் இருக்கும் ஹார்மோன் காரணமாக சிறுமிகள் சீக்கிரம் வயசுக்கு வந்துவிடுகிறார்கள். ஆன்டிபாய்டிக் இஞ்செக்ஷன் கோழிக்கு செலுத்துகிறார்கள் போன நிறைய கேள்விகள் மக்கள் மனதில் இருக்குது. இந்த கோழி நல்லதா கெட்டதா என்பது குறித்து டாக்டர் அருண் குமார் கூறியுள்ளார்.
பாரம்பரியமாகவே, கோழிகளை இறைச்சிக்காக வளர்ப்பது என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். வயல்வெளிகளிலும், பண்ணைகளிலும், வீட்டின் பின்புறத்திலும் நான்கைந்து கோழிகளை வளர்ப்பது வழக்கம். ஏதேனும் பண்டிகைக் காலத்திலோ அல்லது தேவைப்படும்போதோ அவற்றை அடித்து உண்பது பல காலமாகவே நடைமுறையில் இருந்துள்ளது.
ஆனால், பண்ணைகளில் பிராய்லர் கோழிகளை வைத்து வளர்க்கும் முறை 1975 ஆம் ஆண்டுதான் அறிமுகமானது. அந்தக் காலகட்டத்தில் ஒரு கோழி முழுமையாக வளர்ந்து பெரியதாக சுமார் 60 முதல் 70 நாட்கள் ஆகும். ஆனால், இக்காலத்தில், வெறும் 35 முதல் 40 நாட்களிலேயே கோழிகள் விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன. பிராய்லர் கோழி ஒரு சிறந்த புரதச்சத்து நிறைந்த உணவாகும். கொழுப்பை விட புரதமே இதில் அதிகம்.
கிட்டத்தட்ட 100 கிராம் கோழிக்கறியில் 27-30 கிராம் புரதம் நமக்குக் கிடைக்கிறது. இது மிக உயர்தரமான புரதமாகும். அதேபோல, ஒரு முட்டையிலும் சுமார் 6 கிராம் புரதம் நமக்குக் கிடைக்கிறது. அப்படியானால், இதில் என்னதான் பிரச்சனை? ஹார்மோன்களைப் பயன்படுத்தி ஒரு உயிரினத்தை வளர்க்க முடியுமா என்பதுதான் கேள்வி. நடைமுறையில் இது சாத்தியமில்லை.
ஏனெனில், வளர்ச்சி ஹார்மோன்களைப் (Growth Hormone) பயன்படுத்தி வளர்க்க வேண்டுமென்றால், ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை ஊசி போட வேண்டும். கிட்டத்தட்ட 35 முதல் 40 நாட்களுக்கு இந்த ஊசி போட வேண்டும். வெறும் ஊசிக்கான செலவு மட்டுமே ஒரு கோழிக்கு சுமார் 20,000 முதல் 30,000 ரூபாய் வரை ஆகும். இவ்வளவு ஊசிகளைப் போட்டு, ஒரு கோழியை கிலோ 100-150 ரூபாய்க்கு விற்க முடியுமா? வாய்ப்பே இல்லை.
அதேபோல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சீக்கிரமாகப் பூப்பெய்துவதற்கு பிராய்லர் கோழிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று பார்த்தால், கடந்த நூறு வருடங்களாக, எந்தவிதப் பாரபட்சமுமின்றி எல்லா நாடுகளிலும் பூப்பெய்தும் வயது 2-3 வருடங்கள் குறைந்திருக்கிறது. முன்பு 14-15 வயதில்
பூப்பெய்தியவர்கள், தற்போது சராசரியாக 12 வயதிலேயே பூப்பெய்துகின்றனர்.
இதற்கெல்லாம் பிராய்லர் கோழியும், சிக்கன் 65 சாப்பிடுவதும்தான் காரணம் என்று சொல்ல முடியாது. நம் வாழ்வியல் தரம் உயர்ந்திருப்பதும், அனைவருக்கும் நல்ல சத்தான உணவுகள் கிடைப்பதும், சுத்தமான உணவுகள் கிடைப்பதும், என இவை அனைத்தும் சேர்ந்துதான் பூப்பெய்தும் வயதைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நம் நாட்டிலும் நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
சைவம் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களை ஒப்பிட்டுப் பார்த்ததில் பெரிய வித்தியாசம் இல்லை. சைவம் மற்றும் அசைவம் என இரு பிரிவினருக்குமே பூப்பெய்தும் வயது சற்று குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "மெட்டா அனாலிசிஸ்" (Meta Analysis) எனப்படும் சில ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பூப்பெய்தும் வயது குறைவதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான கலோரி உட்கொள்ளல் (Calorie Intake) தான்.
அதாவது, அதிக கலோரி, அதிக மாவுச்சத்து எடுத்துக்கொள்வது, மற்றும் உடல் பருமன் அதிகரிப்பது போன்றவைதான் காரணம். பூப்பெய்தும் முன் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு, அதாவது "ப்ரீ பியூபர்டல் ஃபேட்" (Pre-pubertal Fat) அதிகமாக இருந்தால், அவர்களுக்கு "எக்ஸ்ட்ரா கோனாடல் ஈஸ்ட்ரோஜன்ஸ்" (Extra Gonadal Estrogens) எனப்படும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இதன் காரணமாகவே அவர்கள் சீக்கிரம் பூப்பெய்துகிறார்கள் என்று கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.