தமிழில் அதிகம் சொல்லப்படும் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக பயன்படும் இந்த மாம்பழம் பெரும்பாலும் கோடை காலத்தில் தான் கிடைக்கும். ஆனால் இந்த மாம்பழத்தை யார் சாப்பிட வேண்டும், சர்க்கரை நோயாளிகள் இந்த மாம்பழத்தை சாப்பிடலாமா என்ற பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல் மாம்பழம் உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்ற கருத்தும் இருக்கிறது. இந்த கேள்விகள் அனைத்திற்கும் டாக்டர் நித்யா பதில் அளித்துள்ளார்.
மாம்பழத்தில் நிறைய சத்துக்கள் இருக்கிறது. முக்கியமான பைபர் கண்டென்ட் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து மற்ற அனைவரும் மாம்பழத்தை சாப்பிடலாம். மாம்பழம் சாப்பிட்டுவிட்டு ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இந்த மாதிரி சாப்பிடும்போது மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். நாம் சாப்பிடும் உணவு எளிமையாக செரிமானம் ஆவதற்கு இந்த மாம்பழம் பெரிய அளவில் உதவுகிறது.
அதிகமாக கார்போஹைட்ரெட் உணவுகள் நாம் எடுக்கும்போது, சரியாக செரிமானம் ஆகாது. அதேபோல் புளித்த உணவுகள் குறிப்பாக, இட்லி தோசை மாவை ஒரு வாரம் வைத்திருந்து அதில் உணவை செய்து சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும். இதனால் மலச்சிக்கல் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. மலச்சிக்கல் வராமல் இருக்க, தினமும் சாப்பிடும் உணவுகள் எளிமையாக செரிமானம் ஆக, தினமும் 5-6 சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
காலை அல்லது மதிய நேரத்தில் சாப்பிடும்போது சின்ன வெங்காயத்தை உரித்து உணவுடனே சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும்போது மலச்சிக்கல் பிரச்னை வராது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.