/indian-express-tamil/media/media_files/2025/07/21/nethili-ish-2025-07-21-19-51-47.jpg)
பொதுவாக, அசைவம் சாப்பிடுபவர்கள் எந்த அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேட்பார்கள். உணவியல் ஆலோசனைப் படி, புரதச்சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான அசைவ உணவு மீன். புரதச்சத்து அதிகமாக இருப்பதால், வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறையாவது மீனைச் சேர்ப்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மீனில் உள்ள புரதச்சத்து, குழந்தைகளின் தசை வளர்ச்சி, திசு மற்றும் கொழுப்பின் வளர்ச்சி என அனைத்துக்கும் மிகவும் அவசியமான ஊட்டச்சத்து. எனவே, வாரத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு வாரமும் ஒரு வகையான மீனை உங்கள் அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். நெத்திலி மீனைத் தொடர்ந்து அன்றாட உணவில் சேர்க்கும்போது எந்தெந்த நோய்களைத் தடுக்க முடியும் என்பதைத் தெளிவாகப் பார்ப்போம்.
நெத்திலி மீனில் செலினியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கும். நெத்திலி மீனில் நியாசின் என்ற மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்தும் உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிக்கிறது.
அதே சமயம், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பின் அளவையும் சரியான அளவில் பராமரிக்கிறது. உங்கள் இரத்தத்தில் மொத்த கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தாலோ, ட்ரைகிளிசரைடு அளவு அதிகமாக இருந்தாலோ, அல்லது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்திருந்தாலோ, மீனை உங்கள் அன்றாட உணவில் அடிக்கடி சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெத்திலி மீனில் உள்ள நியாசின், கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிப்பதால், இதயம் ஆரோக்கியமாகச் செயல்பட்டு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
நெத்திலி மீனில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளன. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் இரத்த அழுத்தத்தை (பிபி) அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும். இதனால், உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறையும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பிற்காலத்தில் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் என்பதால், நெத்திலி மீன் பிபியை சரியான அளவில் பராமரிப்பதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
மேலும், நெத்திலி மீனைத் தொடர்ந்து அன்றாட உணவில் சேர்க்கும்போது எலும்புகள் வலிமையடையும். வளரும் குழந்தைகளுக்கு நெத்திலி மீன் கொடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பிற்காலத்தில் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைத்து, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். ஏனெனில், நெத்திலி மீனில் கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் போன்ற எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
நெத்திலி மீனைத் தொடர்ந்து சாப்பிடும்போது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறையும். புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதால், எந்த வகையான புற்றுநோயும் வருவதைத் தடுக்க முடியும். சருமப் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் என எந்தப் புற்றுநோயும் வராமல் தடுப்பதில் நெத்திலி மீன் ஒரு முக்கியமான உணவாக உள்ளது அசைவ உணவுகளில் உடல் எடையைக் குறைப்பதற்கான ஆரோக்கியமான உணவுகளில் மீன் முக்கியமான ஒன்றாகும் என டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.