பொதுவாக கிரமங்களில் சாதரணமாக கிடைக்கும் கீரைகளில் ஒன்று புளிச்சக்கீரை. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகும். புளிச்சக்கீரை பசியைத் தூண்டக்கூடியது. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. புளிச்சக்கீரையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வை கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
பல நன்மைகள் அடங்கியுள்ள புளிச்சக்கீரையில் தொக்கு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
மல்லி – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயப்பொடி – அரை டீஸ்பூன்
வரமிளகாய் – 10
வெந்தயம் – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 2
புளிச்சக்கீரை – ஒரு கட்டு
செய்முறை:
முதலில் மல்லி, சீரகம் மிளகு, வெந்தயம், சேம்பு, வரமிளகாய் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஒரு மிக்ஸி சாரில் அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பெரிய வாணலியில், நல்லெண்ணெய் விட்டு, அதில் கீரையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள கீரையை அதில் சேர்த்து வதக்கவும். இறுதியாக அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து தண்ணீர் ஈர்க்கும்வரை வதக்கி இறக்கினால் சுவையான புளிச்சக்கீரை தொக்கு ரெடி.