இன்றைய கால்கட்டத்தில் பலரும் அதிகம் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. அதிகமாக உணவுகள், மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் தான் இந்த உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. வயதுக்கு ஏற்ற உடல் எடையை விட அதிகமா இருந்தால், பலவிதமான நோய் தாக்கங்கள் இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
அதேசமயம், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தையும் டயட் என்ற பெயரில் பட்டினி இருப்பதையும் அதிகம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாரம்பரிய முறைப்படி உடல் எடையை குறைக்க பல வழிகள் இருக்கிறது. அந்த வகையில் அந்த காலத்தில் ராஜாக்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்திய கறுப்பு கவுனி அரிசியை வைத்து சுவையான கஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
கறுப்பு கவுனி அரிசி – ஒரு கப்
கொள்ளு – ஒரு கப்
பாசி பருப்பு – ஒரு கப்
பார்லி – ஒரு கப்
மிளகு – சீரகம் – பூண்டு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து, தனித்தனியாக கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனை நன்று அரைத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பொடியை தினமும் 2 ஸ்பூன் எடுத்து கஞ்சியாக சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். மேலும் இதில், தயிர் கலந்தும் குடிக்கலாம். இப்படியே ஒரு மாதம் செய்து வந்தால் உடல் எடை குறைவதை பார்க்க முடியும்.
கறுப்பு கவுனி அரிசி சாதாரண வெள்ளை அரிசியை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ், செலினியம் மற்றும் மாலிப்டினம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.