விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் புதிது புதிதாக வந்துகொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் நோய்களை கண்டறிந்து வரும் விஞ்ஞானிகள் மறுபுறம் அதற்கான தீர்வையும் கண்டறிந்து வருகிறார். அப்படி இருந்தும் இன்றும் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல் பல நோய்களுக்கு இயற்கை மருத்துவத்திலேயே தீர்க்க முடியும்.
அந்த வகையில், ரத்த கொதிப்பு நோயில் இருந்து காத்துக்கொள்ள எந்தெந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவர் சிவராமன் விவரமாக கூறியுள்ளார். ரத்த கொதிப்பு இருந்தால் உப்பு அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. உப்பு அதிகம் சாப்பிட்டால் ரத்த கொதிப்பு அதிகரிக்கும். ரத்த கொதிப்பு இருந்தால், அப்போது ரத்த கொழுப்பு இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மறுபுறம் சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறதா என்பதை பற்றியும் செக் செய்துகொள்வது அவசியம். அப்படி ரத்த கொதிப்பு இருக்கிறது உறுதியானால், புலால் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அதில் ஆட்டு இறைச்சி மற்றும் சிகப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது. அதே சமயம் நாட்டுக்கோழி மற்றும் மீன்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி அதிக கொழுப்பு சத்து உள்ள புலால் உணவை அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறானது.
அதேபோல் உடலில் சிறுநீர் எளிதில் வெளியேற்றும் உணவுகளை தேடி சாப்பிட வேண்டும். உதாரணமாக வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளரி, உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உடலில் சிறுநீர் சிரமம் இல்லாமல் வெளியேறும். சிறுநீர் சரியாக போனாலே ரத்த கொதிப்பு நோய் கட்டுப்படும். வாழைத்தண்டு சிறுநீரை பெருக்கும் சக்தி கொண்டது என்பதால், தயிர் பச்சடியில் வெங்காயத்திற்கு பதிலாக வாழைத்தண்டை சேர்த்து சாப்பிடலாம்.
ரத்த கொதிப்பு நோயாளிகள் தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான தண்ணீர் அல்லது குளிர்ச்சியான தண்ணீர் இரண்டுமே ஆபத்து தான். ஆனால், காய்ச்சி ஆறவைத்த நீரை பருகுவது நல்லது. ரத்த கொதிப்பு அதிகம் உள்ள நோயாளிகள் சீரக தண்ணீரை அதிகம் குடிக்கலாம். அடிக்கடி காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை குறைக்க வேண்டும். அதை தவிர்த்து, பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக மோர் எடுத்துக்கொள்வது அவசியம். முருங்கை கீரை சூப் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“