மிளகு சாதம் என்பது சுவையான உணவு மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. மிளகு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பைத் தூண்டி, உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. இதனால் அஜீரணம், வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறையும்.
சள், இருமல் தொல்லை உள்ள குழந்தைகளுக்கு கூட இதை செய்து தரலாம். ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது போன்று வீட்டிலேயே மிளகு சாதம் சுவையாக செய்யலாம். மிளகு சாதம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
தேவையான பொருட்கள்
மிளகு
சீரகம்
எண்ணெய்
நெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
முந்திரி பருப்பு
பெருங்காய தூள்
பூண்டு
வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
உப்பு
சாதம்
மிளகு சீரக தூள்
செய்முறை
ஒரு மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
அவை வறுந்து வந்ததும் மெல்லியதாக நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து உப்பு சேர்த்து கலக்கவும். பொடியாக அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலந்து விடவும். வேகவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும். மேலும் சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து இறக்கினால் அவ்வளவு தான் சுவையான மிளகு சாதம் தயார்.
முடிந்தவரை புதிதாக இடித்த மிளகை பயன்படுத்தவும். இது மிளகு சாதத்திற்கு தனிப்பட்ட மணத்தையும் சுவையையும் தரும். மிளகு சாதத்திற்கு உதிரி உதிரியான சாதம் மிகவும் அவசியம். அதனால், சாதம் வடித்த பிறகு, அதை ஒரு அகன்ற தட்டில் பரப்பி ஆறவிடலாம்.