குடல் பகுதியின் இயக்கத்தை சீராக்கி, அதில் இருக்கும் கழிவுகளை அகற்ற வில்வ இலை தேநீர் பயன்படுவதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீரிழிவு பாதிப்புகளையும் தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வில்வ இலை தேநீர் தயாரிக்கும் முறைபற்றி டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
4 அல்லது 5 வில்வ இலைகளை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இலைகளை இரண்டு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் ஒரு கிளாஸ் அளவிற்கு வற்றியது, அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த தேநீர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த தேநீரை 40 முதல் 48 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால், குடலின் இயக்கம் சீராக இருக்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள், பெப்டிக் அல்சர் பாதிப்பு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளையும் இது குணப்படுத்துகிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
வில்வ இலை தேநீர் நன்மைகள் Vilvam leaf benefits in tamil/ Vilavam leaf tea in tamil /Dr.Mythili
வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் போது, அவர்களின் குடலில் இருக்கும் புழுக்களை அகற்ற இது உதவும். எனவே, 10 நாட்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். மேலும், நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை வில்வ இலை தேநீர் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த தேநீரை தொடர்ந்து 60 நாட்களுக்கு குடித்து வந்தால், இன்சுலின் சுரக்கும் அளவு சீராகும்.
கல்லீரலில் இருக்கும் கழிவுகளையும் அகற்றி, அதனை தூய்மைப்படுத்தும் ஆற்றல் வில்வ இலை தேநீருக்கு இருக்கிறது. இதனால், ஃபேட்டி லிவர், மஞ்சள் காமாலை போன்ற நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியக் கூறுகளையும் இது குறைக்கிறது. கை, கால் வலி இருப்பவர்களுக்கு வில்வ இலை தேநீர் மருந்தாக செயல்படுகிறது என மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.