18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். வெகு விரைவில் வழக்கை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை 3-வது நீதிபதியாக விமலா விசாரிப்பார் என மூத்த நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் அறிவித்தார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை தொடர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்செல்வனை தவிர்த்து 17 பேர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
மேற்படி 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங் ஆஜராகி இன்று வாதிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அருண் மிஸ்ரா அமர்வு இதை விசாரித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காலதாமதம் ஆவதாக மனுதாரர்கள் தரப்பு வைத்த விமர்சனத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
‘தட்டியவுடன் தீர்ப்பு வர நீதிபதிகள் கம்ப்யூட்டர் இல்லை. அவர்களுக்கும் அவகாசம் தேவைப்படும். எனவே மனுதாரர் இந்த குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றம் 3-வது நீதிபதியாக நியமித்த நீதிபதி விமலா மீது நம்பிக்கையின்மையை தெரிவித்து 17 பேர் சார்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்குவார் என நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அருண் மிஸ்ரா ஆகியோர் உத்தரவிட்டனர்.
நீதிபதி எம்.சத்தியநாராயணம் வெகு விரைவில் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறவேண்டும் என்கிற கருத்தையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த வழக்கு விரைவில் பட்டியல் இடப்படும் என தெரிகிறது. விரைவில் விசாரித்து தீர்ப்பு கூறப்படும் வாய்ப்பும் உருவாகியிருக்கிறது.
சென்னை ஐகோர்ட் தீர்ப்பு விபரம்