2019 Lok Sabha Election BSP SP Alliance : இந்த வருடம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பி இருப்பது நாடாளுமன்றத் தேர்தல் தான். காங்கிரஸ் – பாஜக இடையே பலத்த மோதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், உத்திரப் பிரதேசத்தில் கூட்டணி வைத்துள்ளன.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் வெற்றியை தக்க வைத்தது காங்கிரஸ் கட்சி. வெற்றிக்கு உறுதுணையாய் நின்றது பகுஜன் சமாஜ் கட்சி.
நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் காங்கிரஸ்ஸுடன் இணைந்து மெகா கூட்டணியாக பாஜகவை எதிர்க்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலையில், உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது. மீதம் இருக்கும் இரண்டு இடங்களான ரே பரேலி மற்றும் அமேதி ஆகிய இடங்கள் இக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது.
கூட்டணி முடிவான பின்பு, சமாஜ் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் “இந்த கூட்டணி நிரந்தரமானது. இதே கூட்டணி தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடும்” என்று கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : அந்த 3 பேர் இல்லாமல் வலுவாக முடியுமா எதிர்க்கட்சி கூட்டணி ?
2019 Lok Sabha Election BSP SP Alliance – உத்தரப்பிரதேசம்
மக்களவை இடங்களில் சுமார் 80 இடங்களை, அதாவது லோக்சபாவின் 6ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் இந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். ஆட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் மிக முக்கியமான மாநிலமாக விளங்கிவருகிறது உத்திரப் பிரதேசம்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 73 இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டணியானது பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகும் என்று முதலில்ல் பேசிய மாயாவதி குறிப்பிட்டார். மேலும் 1993ம் ஆண்டு கனிஷ் ராம் – முலாயம் சிங் யாதவ் கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ அதே போல் இந்த கூட்டணியும் வெற்றி பெறும் என்று மயாவதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
1993ம் ஆண்டு இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. சமாஜ் கட்சி 109 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 67 இடங்களிலும் வெற்றி பெற்று சட்டமன்றத்தை நிறுவினார்கள். ஆனால் அந்த கூட்டணி 2 வருடங்கள் மட்டுமே நீடித்தது.
முலாயம் சிங் யாதவிற்கு அளித்த வந்த ஆதரவை 1995ல் திரும்பப் பெற்றார் மாயாவதி. அதனைத் தொடர்ந்து சமாஜ் கட்சி உறுப்பினர்கள், மாயாவதி மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த வீட்டில் தாக்கல் நடத்தினார்கள் என்பது வரலாறு. அதன் பிறகு மீண்டும் தற்போது தான் இந்த கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.