கேரளாவில் 3 மடங்கு அதிக மழை! இந்திய வானிலை மையம்

ஆகஸ்ட் 16 வரை 619 மிமீ மழை பெய்துள்ளது

கேரளா மழை: கேரளாவில் 100 வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு மழையின் அளவு அதிகமாக உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு சென்றார்.

அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றதும் அப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆய்வுப் பணி தாமதமானதால், மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதேபோல், முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “கேரள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிப்பதுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள வெள்ளத்தை, தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கேரளத்தில் வழக்கத்தைவிட அதிகமாக 3 மடங்கு மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 16 வரை 619 மிமீ மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இயல்பான மழையளவு 244 மி.மீ தான் இருக்கும் என்றும், தற்போது மூன்று மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ளம் குறித்த லைவ் அப்டேட்ஸ் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close