Advertisment

உ.பி-யில் 68 பேர் கொல்லப்பட்ட வழக்கு; குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை; கொன்றது யார்? குடும்பத்தினர் கேள்வி

உத்தரபிரதேசம் மீரட் அருகே மலியானாவில் 68 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்; அப்படியானால் எங்கள் குடும்பங்களைக் கொன்றது யார்? இறந்தவர்களின் குடும்பத்தினர் கேள்வி

author-image
WebDesk
New Update
maliana

திங்கள்கிழமை, மீரட் மாவட்டம், மலியானா கிராமத்தின் முக்கிய சதுக்கம். 1987 வன்முறைகள் பக்கத்தில் உள்ள பாதைகளில் நடந்தன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - கஜேந்திர யாதவ்)

Anand Mohan J

Advertisment

மே 23, 1987 இல், மீரட்டின் புறநகரில் உள்ள மலியானா கிராமத்தில் 68 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதில் இருந்து, அங்கிருந்து பல குடும்பங்கள் வெளியேறிவிட்டனர், சில குடும்பங்கள் மட்டுமே அங்கேயே தங்க முடிவு செய்து வசித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான மெதுவான நீதிமன்ற நடைமுறையை எதிர்த்துப் போராடி வந்தவர்களுக்கு கடந்த வாரம் அளிக்கப்பட்ட தீர்ப்பு மனவேதனையை தந்துள்ளது.

வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 41 பேரையும் மதுராவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் விடுவித்த பிறகு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதிக்காக மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காத்திருப்பு மேலும் நீடித்துள்ளது. மார்ச் 31 அன்று வழங்கப்பட்ட 26 பக்க தீர்ப்பில், கூடுதல் மாவட்ட நீதிபதி லக்விந்தர் சிங் சூட், "குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை" மற்றும் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மீது "கடுமையான சந்தேகங்கள் எழுகின்றன" என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: ஓடும் ரயிலில் சக பயணி மீது தீ வைப்பு: 3 பேர் பலி.. கேரளாவில் பயங்கரம்

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உயிர் பிழைத்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அறிக்கைகளின்படி, உத்தரபிரதேச மாகாண ஆயுதக் காவலர்களின் சில பணியாளர்களுடன் ஒரு கும்பல், மலியானா கிராமத்தைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியபோது வன்முறை வெடித்தது. யாகூப் அலி என்ற குடியிருப்பாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

publive-image

(இடமிருந்து) 1987 கலவரத்தில் பாதிக்கப்பட்ட நவாபுதீன், யாகூப் அலி, மெஹ்தாப் மற்றும் யாமீன். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

63 வயதான யாகூப் அலி, உள்ளூர் மசூதியில் நமாஸில் கலந்துகொண்டபோது தோட்டாக்களின் சத்தம் காற்றில் எப்படி ஒலித்தது என்பதை நினைவு கூர்ந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் சுடப்பட்டதால், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால், அவர் தனது வீட்டிற்குச் செல்லும் பாதுகாப்பான வழியைக் கண்டுபிடிக்க தெருக்களில் ஓடியதாக அவர் கூறினார்.

யாகூப் அலி தானும் தாக்கப்பட்டதாகவும், காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார். உள்ளூர் போலீஸ்காரர் ஒருவர் தலையிட்டதால், ​​மாகாண ஆயுதப்படை காவலர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார். "நான் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அதனால் நான் உயிர் பிழைத்தேன். எனது மருமகன் வன்முறையில் உயிரிழந்தார். அவர் கழுத்தில் சுடப்பட்டார்... அப்படியானால், எங்களையெல்லாம் கொன்றது யார்? எங்கள் வீடுகளுக்கு தீ வைத்தது யார்? எங்களை யாரும் கொல்லவில்லை என்றால் 36 ஆண்டுகளாக வழக்கை ஏன் விசாரிக்க வேண்டும்,'' என்று அவர் கூறினார்.

தையல்காரரான 61 வயதான வக்கேல் அகமது சித்திக், தனது வயிற்றிலும், கையிலும் சுடப்பட்டதாகவும், தனது கடைக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், ”ஒரு புதிய கடையை கட்டுவதற்கு போதுமான பணத்தை சேமிக்க எனக்கு பல ஆண்டுகள் ஆனது. வடுக்கள் இல்லாத அல்லது தீண்டப்படாமல் விடப்பட்ட ஒரு நபர் கூட இல்லை. கண்ணீர், ரத்தம், உடைந்த கால்கள், சிதைந்த உடல்களை பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. பல ஆண்டுகளாக, நீதி கிடைக்கும் என்று நினைத்தேன். இந்த தீர்ப்பை என் இதயமும் மனமும் ஏற்க மறுக்கிறது,'' என்று கூறினார்.

61 வயதான ரஹீஸ் அகமதுக்கு முகத்தில் குண்டு காயம் ஏற்பட்டது. வன்முறை வெடித்தபோது அவரது தந்தை முகமது யாமின் காணாமல் போனார். "நாங்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடினோம். கான்பூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அவர், மலியானாவை அடைந்தபோது வன்முறை வெடித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் விசாரணையின் போது இறந்தனர்; பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். நாங்கள் தொடர்ந்து இருப்போம். போராடுவோம்,'' என்று ரஹீஸ் அகமது கூறினார்.

வாழ்வாதாரத்திற்காக வீடுகளுக்கு வர்ணம் பூசும் 56 வயதான மெஹ்தாப், ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது தந்தையின் நினைவு இன்னும் தன்னை ஆட்டிப்படைக்கிறது என்று கூறினார். மேலும், “அவர் கழுத்தில் சுடப்பட்டார். அவர் நமாஸிலிருந்து வந்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தார். அவர் சுடப்பட்டபோது அவர் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அவருக்கு ரத்தம் கொட்டியதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்... நான் இரண்டடி நடந்தேன், அவர் இறந்துவிட்டார். நான் பின்வாங்க மாட்டேன். நீதிக்காக போராடுவோம்,'' என்று மெஹ்தாப் கூறினார்.

55 வயதான நவாபுதீன் தனது பெற்றோர் இருவரையும் வன்முறையில் இழந்தார். அவர் தனது வீட்டிற்கு வெளியே உள்ள சௌக்கில் தரையில் எரிந்து கிடந்த உடல்களை பார்த்தார். “நான் ஒரு மசாலா கடையை நிறுவி, என் சகோதரிகள் மற்றும் என் குழந்தைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். இந்த தீர்ப்புக்கு நான் என்ன செய்ய முடியும்? என்ன பயன்’’ என்று அவர் கூறினார்.

45 வயதான யாமின், தனது தந்தையை இழந்தார், அவர் வீட்டிலேயே இருக்க முடிவு செய்தார், அதே நேரத்தில் குடும்பத்தினர் அருகிலுள்ள ஒரு தலித் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். “எனது தந்தையின் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் அவரது உடலைப் பிறகு பார்த்தேன். அவரைக் கொன்றது யார்” என்று யாமின் கேட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment