General Election 2019: பிரதமர் நரேந்திர மோடியின் சில நடிவடிக்கைகளையும், கொள்கைகளையும் Just Asking என்ற ஹேஷ்டேக் மூலம், கேள்விகளால் விமர்சித்து துளைத்து எடுத்தவர், எடுத்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபத்தில், துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை பிரதமர் மோடி கழுவிய வீடியோ வெளியான போது, 'இந்த தேர்தல் பம்மாத்து வேலையெல்லாம் வேண்டாம்" என்று பகிரங்கமாக விமர்சித்தார். தற்போது, ட்விட்டரில் கேள்விக் கேட்டது போதும்... மக்களவையில் கேள்விக் கேட்கப் போகிறேன் என்று சுயேச்சையாக தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஜனவரி 5-ம் தேதி அறிவித்த பிரகாஷ் ராஜ், அதிலிருந்து தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார். ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸிடம் ஆதரவு கேட்டபோது, தங்களது கட்சியில் இணைந்தால் ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டனர்.
இந்நிலையில். பெங்களூரு மத்திய தொகுதியில் தொடர்ந்து 2 முறை வென்ற பாஜக வேட்பாளர் பி.சி.மோகனை வீழ்த்த பிரகாஷ் ராஜ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக, பிரகாஷ் ராஜ் தனியார் நிறுவனம் மூலம், அந்த தொகுதியில் சர்வே நடத்தி, அதற்கு பிறகு பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம். பெங்களூரு மத்திய தொகுதியில் சுமார் 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இளைஞர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். மொழிவாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக 7.5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களை அடுத்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் 5.5 லட்சம் பேரும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழியினர் 3 லட்சம் பேரும் வசிக்கின்றனர்.
இந்த வாக்காளர்களை குறி வைத்தே பிரகாஷ் ராஜ் தனது பிரச்சாரத்தை டிஸைன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. செல்லும் இடங்களில் கூடியிருக்கும் மக்களைப் பொறுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளில் பேசி அவர்களை கவர்கிறாராம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a732-300x217.jpg)
இளைஞர்கள், பெண்கள் ஆகியோருடன் செல்ஃபி எடுத்தும், ஆட்டோகிராஃப் போட்டும் வாக்கு சேகரிக்கிறார். மேலும் பிரச்சாரத்துக்கான குழுவை உருவாக்கி துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அதுபோல், அங்குள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 5 காங்கிரஸ், 3 பாஜக வசம் உள்ளன. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மக்களவை தேர்தலிலும், இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட உள்ளன. இதற்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவக்கக் கட்டத்தில் உள்ளன. இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதால், அது நிச்சயம் பிரகாஷ் ராஜுக்கு சவால அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம், ஆம் ஆத்மி அவருக்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில், கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைப் பெறுவதும் பிரகாஷ் ராஜின் முக்கிய திட்டத்தில் ஒன்று என கூறப்படுகிறது.
மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்தை மட்டும் முன்னிறுத்தாமல், அத்தொகுதியில் பெருவாரியான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்து தனது பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க - பாலகோட் தாக்குதல்: 'பாஜக அதிக இடங்களில் வெல்லும் என நான் சொல்லவில்லை" - எடியூரப்பா அவசர மறுப்பு