பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம், வரும் மக்களவை தேர்தலில் பாஜக கர்நாடகாவில் 22 இடங்களில் வெற்றிப் பெற உதவி புரியும் என நான் கூறவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் பிஎஸ் எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட் பகுதியில் நேற்றுமுன்தினம் (பிப்.26) அதிகாலை பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஜெயஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரன் யூசுஃப் அசார் கொல்லப்பட்டான் என இந்திய அரசு தரப்பில் உறுதிபடுத்தப்பட்டது.
1999ல் இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய யூசுஃப் அசார் - முழுவதும் படிக்க க்ளிக் செய்யவும்
இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, 'பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம், வரும் மக்களவை தேர்தலில் பாஜக கர்நாடகாவில் 22 இடங்களில் வெற்றிப் பெற உதவி புரியும்' என தெரிவித்திருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
"தற்போது நிலவும் சூழலால்.... ஒவ்வொரு நாளும் காற்று பாஜக பக்கம் வீசுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிற்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை, அந்நாட்டிற்குள்ளேயே புகுந்து தாக்கிய இந்தியாவின் நடவடிக்கையால், தேர்தலுக்கு முன்பே மோடியின் அலை வீசத் தொடங்கியிருக்கிறது. இது இளைஞர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறது. இதனால், வரும் மக்களவை தேர்தலில், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 இடங்களில் பாஜக 22 இடங்களை வெல்லும்" என்று கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டது.
மேலும் படிக்க - ஒட்டு மொத்த இந்தியர்களின் ஒற்றை வேண்டுதலாய் இருக்கும் அபிநந்தன் வர்த்தமான் யார் ?
இந்த நிலையில், எடியூரப்பா தான் சொன்ன கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தெரிவித்த கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது. 'நிலைமை பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது' என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு சொன்னேன். கர்நாடகாவில் மோடி தலைமையில் பாஜக 22 வெல்லும் என்று நான் இப்போது முதன்முறையாக சொல்லவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது கர்நாடகாவில், பாஜக 16 மக்களவை தொகுதியை கையில் வைத்துள்ளது. காங்கிரஸ் 10 மற்றும் ஜனதா தளம் 2 இடங்களையும் வைத்துள்ளன. அங்கு, காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலிலும், இவ்விரு கட்சிகளும் இணைந்தே தேர்தலை சந்திக்கின்றன. தொகுதி ஒதுக்கீடு பணி தொடங்கியுள்ளது. ஜனதா தளம் 10-12 இடங்களை கோருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க - India-Pakistan tension LIVE Updates : சிறைபிடிக்கப்பட்ட விமானி பத்திரமாக திரும்ப நடிவடிக்கை எடுக்கப்படும் - வி.கே.சிங்