கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானியின் குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ரிசர்ச் சுமத்திய “பங்கு கையாளுதல் முறைகேடு” மற்றும் “கணக்கியல் மோசடி” குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மூன்று மாதங்கள் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை அவகாசம் அளித்தது. இந்த வழக்கை ஜூலை 11ம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: 2016 முதல் அதானி நிறுவனம் விசாரணையில் இல்லை; உச்ச நீதிமன்றத்தில் செபி பதில்
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு ஏதுவாக, தமக்கு சமர்ப்பிக்கப்பட்ட நீதிபதி ஏ.எம் சப்ரே குழுவின் அறிக்கையை, மனுதாரர் மற்றும் எதிர் தரப்புக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை கோரிய சில மனுதாரர்கள், அதானி நிறுவனங்களை செபி விசாரித்து வருவதாக குற்றம் சாட்டியதற்கு, 2016 ஆம் ஆண்டு முதல் அதானி குழுமத்தின் எந்த நிறுவனத்தையும் விசாரிக்கவில்லை என்று செபி நீதிமன்றத்தில் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த கால அவகாச நீட்டிப்பு வந்துள்ளது.
சந்தை கட்டுப்பாட்டாளரான செபி (SEBI) தனது பதில் பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்களின் வாதத்திற்கு “ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மற்றும்/அல்லது எழும் சிக்கல்களுடன் எந்த தொடர்பும் மற்றும்/அல்லது இணைப்பும் இல்லை” என்று கூறியது.
குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை முடிக்க செபி மேலும் ஆறு மாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் நீட்டிப்பை மறுத்த நீதிமன்றம், “இப்போது 6 மாதங்கள் வழங்க முடியாது. பணியில் சற்று நிதானம் தேவை. ஒரு குழுவை ஒன்றிணைக்கவும். ஆகஸ்ட் நடுப்பகுதியில் வழக்கை பட்டியலிடலாம் மற்றும் அறிக்கையை வழங்கலாம்.. 6 மாதங்கள் குறைந்தபட்ச அவகாசம் கொடுக்க முடியாது. SEBI காலவரையின்றி நீண்ட காலம் எடுக்க முடியாது, நாங்கள் அவர்களுக்கு 3 மாதங்கள் தருகிறோம்,” என்று கூறியது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறு விற்பனை நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான குழுமம் “பல தசாப்தங்களாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி செய்தது” என்று குற்றம் சாட்டியது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றைக் விசாரித்தப்போது, மார்ச் மாதம், இந்த விஷயத்தை விசாரிக்க செபியைக் கேட்டு, விசாரணையை முடிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil