கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அலோக் வர்மாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு இரவு போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதே சமயம் உச்சநீதிமன்றம் அவருக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா:
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராஜேஷ் அஸ்தானா நடுவே அதிகார மோதல் வெடித்தது. இதனால் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அலோக் வர்மா மற்றும் அஸ்தானா ஆகிய இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி உத்தரவிட்டது மத்திய அரசு.
இதனையடுத்து நாகேஸ்வர ராவ், இடைக்கால சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டார்.இதை ஏற்றுக் கொள்ளாத அலோக் வர்மா, மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசுக்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடுத்த வழக்கு இந்தியாவின் வரலாற்று சரித்திரத்தில் எழுதப்படும் அளவுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர், தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 45 நாட்கள் விசாரிக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் தொடங்கி மத்திய அரசின் அதிகார வரம்பு வரை விசாரணை நீண்டன. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தலைமை நீதிபதி இல்லாததால் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் இன்று (8.1.19) இந்த தீர்ப்பை வாசித்தார். அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி அவர் சிபிஐ இயக்குநராக தொடருவார் என்றும் அதிரடி உத்தரவை பிற்பித்தார்.
அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள் - ஒரு பார்வை
அதேநேரம், அலோக் வர்மா, எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய கமிட்டி சிபிஐ இயக்குநர் மீதான குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என கூறிய நீதிபதி, ஒரு இரவில் மத்திய அரசு தன்னியச்சையாக எடுத்த இந்த முடிவுக்கு தான் இந்த தடை பொருந்தும் என்று கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த பரபரப்பு தீர்ப்பு இந்திய அரசியல் தலைவர்களை உற்று நோக்க வைத்துள்ளது.