ராம நவமி ஊர்வலங்கள் தொடர்பாக பீகாரில் வகுப்புவாத பதற்றம் பல பகுதிகளில் மோதல்களுக்கு வழிவகுத்த சில நாட்களுக்குப் பிறகு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பீகார் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சசாரம் மற்றும் பீகார் ஷெரீப்பில் கலவரக்காரர்கள் சுதந்திரமாக திரிந்துள்ளனர் என்று கூறினார். மேலும், 2025-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற கேடுகெட்டவர்கள் கடுமையாகக் கையாளுப்படுவார்கள் என்றும் அமித் ஷா கூறினார்.
அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வருகை தரவிருந்த நாளந்தாவின் பீகார் ஷெரீப் மற்றும் சசாரம் பகுதிகளில் மார்ச் 31 அன்று மோதல்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், அப்பகுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இதையும் படியுங்கள்: ‘70 ஆண்டுகளில் ரூ.48,20,69,00,00,000 கொள்ளை: காங்கிரஸ் ‘ஊழலை’ குறிவைத்து பா.ஜ.க வீடியோ பிரச்சாரம்
“சசாரம் மற்றும் பீகார் ஷெரீப்பில் கலவரக்காரர்கள் வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 2025ல் பீகாரில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் அவர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள்” என்று நவாடாவில் நடைபெற்ற பேரணியில் அமித் ஷா கூறினார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க அரசு “மகாத்பந்தன்” அரசை வேரோடு பிடுங்கி எறியும் என்று கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “40 (மக்களவை) தொகுதிகளிலும் மோடிஜியின் தாமரை மலரும் என்று பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர்” என்றும் கூறினார்.
லாலு பிரசாத்தும் நிதிஷ் குமாரும் பயங்கரவாதம் வளர உதவிய சமாதான அரசியலை கடைப்பிடித்ததாகவும், அதே நேரத்தில் மோடி ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கிண்டல் செய்த அமித் ஷா, “காட்டாட்சி நடத்திய லாலு பிரசாத் யாதவின் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் அரசால் பீகாரில் அமைதியை ஏற்படுத்த முடியுமா? அதிகாரப் பசியால் லாலு பிரசாத் யாதவின் மடியில் நிதிஷ்குமார் அமர்ந்துள்ளார், ஆனால் ‘மகாத்பந்தன்’ அரசை நாம் வேரோடு பிடுங்கி எறிவோம். லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் எப்போதும் அமைதிப்படுத்தும் கொள்கையை கடைபிடித்தனர், இது பயங்கரவாதம் வளர உதவியது. மறுபுறம், பிரதமர் மோடி சட்டப்பிரிவு 370 ஐ நீக்கிவிட்டு, பயங்கரவாதிகளை கடுமையாகக் கையாண்டார்,” என்று கூறினார்.
“நிதிஷ் குமார் பிரதமராக முடியாது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக வருவார் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர்” என்று அமித் ஷா கூறினார்.
ஜாதிவெறியை பரப்பும் நிதிஷ் குமார் மற்றும் காட்டாட்சியின் முன்னோடி லாலு பிரசாத் ஆகியோருடன் பா.ஜ.க ஒருபோதும் கைகோர்க்க முடியாது என்று அமித் ஷா கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ், ஜே.டி(யு), ஆர்.ஜே.டி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்த்ததாகவும், அதே நேரத்தில் “ஒரு காலை வேளையில் மோடி அங்கு வானளாவிய கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்” என்றும் அமித் ஷா கூறினார்.
கூடுதல் தகவல்கள்: PTI, ANI
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil