scorecardresearch

கேரள பழங்குடியின இளைஞர் படுகொலை வழக்கு; 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

கேரள மன்னார்க்காடு நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு அட்டப்பாடி பழங்குடி இளைஞர் படுகொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என்றும் இருவரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது

kerala
அட்டப்பாடியில் படுகொலைச் செய்யப்பட்ட மதுவின் தாயார் மற்றும் சகோதரி (கோப்பு படம்)

PTI

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு உணவுப் பொருட்களைத் திருடியதாகக் கூறி பழங்குடியின இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 13 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கேரள சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான மது மீது பிப்ரவரி 22, 2018 அன்று உள்ளூர் மக்களால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, பிடித்து கட்டிவைக்கப்பட்டு பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதையும் படியுங்கள்: சத்தீஸ்கரில் முன்னாள் காதலியின் திருமணப் பரிசில் வெடிகுண்டு வைத்தவர் கைது; மணமகன், சகோதரர் மரணம்

இச்சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எம்.ரதீஷ் குமார், இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவு 304 பகுதி II மற்றும் பல்வேறு குற்றங்களுக்கான ஐ.பி.சி.  சட்டத்தின் கீழ் கொலைக்கு சமமான ஆனால் கொலை அல்லாத குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார், என சிறப்பு அரசு வழக்கறிஞர் ராஜேஷ் எம்.மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும், தண்டனை வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும், விதிக்கப்பட்ட தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் ராஜேஷ் எம்.மேனன் கூறினார்.

“குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற தகுதியானவர்கள்,” என்று கூறிய சிறப்பு அரசு வழக்கறிஞர் ராஜேஷ் எம்.மேனன், தண்டனையை அதிகரிக்க அரசு மேல்முறையீடு செய்யும் என்று தான் உறுதியாக நம்புவதாக கூறினார்.

குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படாதது நீதிமன்றத்தின் தீர்ப்பில் “முரண்பாடானது” என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் ராஜேஷ் எம்.மேனன் கூறினார்.

குற்றவாளிகளுக்கு ஐ.பி.சி.,யின் கீழ் மற்ற குற்றங்களுக்காக பல்வேறு விதிமுறைகளில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன, ஆனால் சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால், அவர்கள் 7 ஆண்டுகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும், என்று ராஜேஷ் மேனன் கூறினார்.

மதுவின் குடும்பத்தினரும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையில் அதிருப்தி தெரிவித்ததோடு, அது போதாது என்றும் தெரிவித்தனர்.

“தண்டனை போதாது,” என்று அவரது தாயார் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

அவரது சகோதரியும் தண்டனை போதாது என்று கூறி, அதிக தண்டனை விதிக்க நீதிமன்றம் தவறியதாக குற்றம் சாட்டினார்.

“அளிக்கப்பட்ட தண்டனையில் நாங்கள் திருப்தி அடையவில்லை. நீதிமன்றத் தரப்பில் தோல்வி ஏற்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது, எப்படி தாக்கப்பட்டு காட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டார் என்பது நீதிமன்றத்திற்கு புரியவில்லை. இந்த நீதிமன்றம் என்பது நமது நலன்களை பாதுகாக்க இருக்க வேண்டும்.”

“எங்களுக்கு இங்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அதற்கு நாங்கள் எங்கு செல்வது? உயர் நீதிமன்றங்களுக்கு செல்வது மட்டுமே எங்களுக்கு உள்ள ஒரே வழி. மதுவுக்கு நீதி கிடைக்க வேண்டும், அதற்காக உச்ச நீதிமன்றம் சென்றாலும் சரி,” என்று சகோதரி கூறினார்.

அட்டப்பாடியில் மனநல காப்பகம் அமைக்க வேண்டும் என்றும் கேரளாவில் இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மாநில அரசை வலியுறுத்தினார்.

விரிவான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

13 பேரில், முதல் குற்றவாளி ஐ.பி.சி.,யின் பிரிவு 304 II இன் கீழ் உள்ள குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார், மீதமுள்ள 12 பேர் கூடுதலாக பிரிவு 326 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிகளால் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல்) மற்றும் IPC இன் 367 (ஒரு நபரை கடுமையான காயம், அடிமைத்தனத்திற்கு உட்படுத்துவதற்காக கடத்தல் அல்லது அபகரித்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றங்களுக்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் பிரிவு 3(1)(டி)ன் கீழும் 12 குற்றவாளிகளும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர் என சிறப்பு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கின் 16வது குற்றவாளிக்கு IPC பிரிவு 352 இன் கீழ் “கடுமையான ஆத்திரமூட்டலைத் தவிர வேறுவிதமாக தாக்குதல் அல்லது கிரிமினல் சக்தி” குற்றத்திற்காக மட்டுமே குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், இது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய தண்டனை அல்லது ரூ 500 வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படக் கூடியது என்று ராஜேஷ் மேனன் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள 2 பேரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

பல சாட்சிகள் விரோதமாக மாறியதால் வழக்கு வலுவிழந்ததாக, தண்டனைக்குப் பிறகு, செவ்வாயன்று சிறப்பு அரசு வழக்கறிஞர் ராஜேஷ் மேனன் கூறியிருந்தார்.

மதுவின் தாயார் தீர்ப்பில் திருப்தி இல்லை என்று கூறினார், குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் விடுதலை மற்றும் 16 பேரில் யாரும் கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை என்பதற்காக அவர் அதிருப்தி அடைந்தார்.

“இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். அவர்கள் அனைவரும் குற்றவாளிகள், ”என்று தாயார் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததற்காக நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஆனால் இருவரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகவும் பாதிக்கப்பட்டவரின் சகோதரி கூறினார். மதுவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தை இவ்வளவு காலம், இந்த நிலை வரை நடத்த முடியும் என்று யாரும் நினைக்காததால், இந்த தீர்ப்பு மகிழ்ச்சியாக இருந்தது, என்று சகோதரி கூறினார்.

“எனவே, நான் இனி ஏமாற்றமோ சோகமோ அடைய மாட்டேன். தேவைப்பட்டால், இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்ல முடியும் என்று எனக்குத் தெரியும். (அனைத்து 16 பேருக்கும்) கொலைக் குற்றச்சாட்டு மீது தண்டனை வழங்கவும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் விடுதலைக்கு எதிராகவும் மேல்முறையீடு செய்வோம்.”

“என் சகோதரனுக்கு நீதி கிடைத்ததாக நான் நம்பவில்லை. அவர்கள் அனைவரும் தண்டிக்கப்படும் வரை அவருக்கு நீதி கிடைக்காது” என்று நீதிமன்றத்திற்கு வெளியே கூறினார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மதுவின் தலையில் காயங்கள் மற்றும் உடல் முழுவதும் காயங்கள், உடைந்த விலா எலும்புகள் மற்றும் உட்புற இரத்தப்போக்கு இருந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மது, கடந்த பல மாதங்களாக காட்டில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பாலக்காடு மாவட்டத்தின் வனப்பகுதியான அகலியில் உள்ள சில கடைகளில் உணவுப் பொருட்களைத் திருடியதாகக் கூறி கிட்டத்தட்ட 10-15 பேர் கொண்ட குழு காட்டிற்குச் சென்று அவரைத் தாக்கியதாக அவரது தாயும் சகோதரியும் 2018 இல் தொலைக்காட்சி சேனல்களுக்குத் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Attapadi tribal lynching case kerala court accused rigorous imprisonment

Best of Express