ஒரு சலாஹூதின் உருவானால், ஜம்முவில் 10 பகத்சிங் உதயமாவார்கள்: பாஜக

நேற்று மெஹபூபா முஃப்தி விடுத்த எச்சரிக்கைக்கு பதில் கூறிய பாஜக

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, நேற்று தியாகிகள் தினத்தினை நினைவு கூர்ந்தார்.

அதற்காக முஃப்தி, தியாகிகளின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, காஷ்மீர் மக்களின் ஓட்டுரிமையை மறுத்தால், யாசின் மாலிக் மற்றும் சலாஹூதீன் போன்றவர்கள் உருவாகுவார்கள். அதனை மத்திய அரசால் தடுக்க இயலாது என்று கூறினார்.

மேலும் தன்னுடைய கட்சியினை உடைக்க விரும்பினால், கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்றும் எச்சரித்தார் அவர்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும்  எதிர்ப்புகள் வந்தன. இந்நிலையில் காஷ்மீரில் இருக்கும் பாஜக உறுப்பினர்கள் நேற்று முஃப்தியின் கொடும்பாவியினை எதிர்த்தும், முஃப்தியை கைது செய்யக் கூறியும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

பாஜகவின் மஹிலா மொர்ச்சா இயக்கத்தின் தலைவர் வீனா குப்தா கூறும் போது “முஃப்தி வகித்த பதவிக்கு கௌரவமாக நடந்து கொள்வது தான் அனைவருக்கும் நல்லது” என்றார்.

மேலும், மக்கள் ஜனநாயக கட்சியினை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவருடைய கடமை. அதை மட்டும் அவர் சரியாக செய்தால் போதும். சலாஹூதீன் போன்ற தீவிரவாதிகள் உருவானால் ஜம்முவில் இருந்து அவர்களை ஒழிக்க பகத் சிங்குகள் உருவாக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

மற்றொரு பாஜக தலைவர் ஆயுத்ய நாத் பேசுகையில், தேசத்திற்கு விரோதமாக பேசிய முஃப்தியினை மாநில அரசு கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாஜக, பிடிபியுடனான கூட்டணியில் இருந்து வெளிவந்த போதும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close