கர்நாடகா இடைத்தேர்தல் : கர்நாடகாவில் இருக்கும் ராமநகரா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் பாஜக வேட்பாளர் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக சார்பில் எல். சந்திரசேகர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி இந்த இடைத் தேர்தலில் போட்டியிட இருந்தனர். வருகின்ற 3ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருந்தது.
பாஜகவில் இருந்து வெளியேறிய வேட்பாளர்
பாஜகவினர் எனக்கு கட்சிக் கொடி கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். ஆனால் கட்சியின் பிரச்சாரத்திற்கு கூட என்னை எங்கும் சேர்த்துக் கொள்ளவில்லை. உட்கட்சி பூசல் காரணமாக ராமநகரா தொகுதி நிராகரிக்கப்பட்டே வந்தது என்று கூறினார்.
இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் பற்றி பேசும் போது “கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவிடம் தொடர்ந்து பல நாட்கள் போனில் பேச முற்பட்ட போதும், என்னுடைய அழைப்புகளுக்கு அவ்விடத்தில் இருந்து பதில்கள் ஏதும் வரவில்லை என குறிப்பிட்டார்.
பாஜகவில் இருக்கும் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதம் என்னை வெகுவாக பாதித்தது. இனி எனக்கு பாஜகவில் எந்த வேலையும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். நான் என்னுடைய தாய் கட்சியான காங்கிரஸிற்கே திரும்புகிறேன் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.எம். லிங்கப்பாவின் மகன் தான் சந்திரசேகர். அம்மாநிலத்தினை ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ராமநகரா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் உறுப்பினரை நிறுத்த முடிவு செய்தது காங்கிரஸ். இதன் விளைவாகவே சந்திரசேகர் இந்த கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
கர்நாடகா இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள்
மக்களவை தொகுதிகளான ஷிவமொக்கா, பல்லாரி, மற்றும் மாண்டியா, மற்றும் சட்டமன்ற தொகுதிகளான ராமநகரா, ஜம்காண்டி ஆகிய இடங்களில் நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் நவம்பர் 13ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
மேலும் படிக்க : இந்திய அரசியலில் ஏற்படும் மாற்றங்கள். பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் இந்திய கட்சிகள்